தேர்தல் அறிக்கை: மக்களிடம் கருத்து கேட்க செயலி அறிமுகம் செய்கிறது திமுக

சட்டசபை தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கு மக்களிடம் கருத்து கேட்க, பிரத்யேக மொபைல் செயலியை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை அறிமுகம் செய்கிறார்.
சென்னை,
சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. அந்த வகையில், ஆளும் கட்சியான திமுக, தனது தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் 12 பேர் கொண்ட குழு ஏற்கனவே அமைத்துள்ளது.கடந்த 22 ஆம் தேதி இந்த குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திமுகவின் தேர்தல் அறிக்கை, மக்களின் கோரிக்கைகள் அடங்கிய தேர்தல் அறிக்கையாக இருக்கும் என கனிமொழி கூறியுள்ளார்.
இந்த குழுவில் திமுக செய்தித் தொடா்புச் செயலா் டி.கே.எஸ்.இளங்கோவன், அமைச்சா்கள் கோவி.செழியன், பழனிவேல் தியாகராஜன், டி.ஆா்.பி.ராஜா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அனைத்து தரப்பினரையும் சந்தித்து கருத்துகளைக் கேட்டு திமுக தோ்தல் அறிக்கையை தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கு மக்களின் கருத்துகளைக் கேட்பதற்கு திமுக ஒரு மொபைல் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த பிரத்யேக செயலியை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளைஅறிமுகம் செய்கிறார். மக்கள் தங்களுடைய கோரிக்கைகளை, கருத்துகளை இதன்மூலமாக தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.






