கட்டுமான பணிக்கான பில் தொகையை அனுமதிக்க ரூ.50 ஆயிரம் லஞ்சம் - என்ஜினீயர் கைது

லஞ்சம் கொடுக்க விரும்பாத பழனிக்குமார், இதுகுறித்து விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.
மதுரை,
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட கே.செ வல்பட்டயில் மின் மயான கட்டிடம் ரூ.1 கோடியே 38 லட்சத்தில் கட்ட டெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டரை மதுரை செல்லூரை சேர்ந்த பழனிக்குமார் என்பவர் எடுத்து, பணிகள் நடைபெற்றன.
கட்டிட பணிகள் முடிக்கப்பட்டு அதற்கான பில் தொகை ரூ.1 கோடியே 16 லட்சத்து 48 ஆயிரத்து 160 வழங்கப்பட்டு உள்ளது. மீதம் உள்ள தொகை வழங்கப்படாமல் இருந்ததாகவும், அந்த தொகையை வழங்கும்படி காரியாபட்டி பேரூராட்சி அலுவலக இளநிலை என்ஜினீயரான கணேசனிடம் (வயது 54), பழனிக்குமார் கேட்டுள்ளார்.
மீதி தொகையை அனுமதிக்க ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத பழனிக்குமார், இதுகுறித்து விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் ஆலோசனையின்பேரில், ரசாயன பவுடர் தடவிய 50 ஆயிரத்துக்கான ரூபாய் நோட்டுகள் பழனிக்குமாரிடம் கொடுக்கப்பட்டன.
அந்த பணத்தை அவர், காரியாபட்டி பேரூராட்சி அலுவலகத்துக்கு கொண்டு சென்று, அங்கு என்ஜினீயர் கணேசனிடம் கொடுத்தார். அந்த பணத்தை வாங்கியபோது, அங்கு மறைந்து நின்றிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கணேசனை கையும், களவுமாக கைது செய்தனர்.






