ஈரோடு : சரக்கு வாகனம் கவிழ்ந்து தீப்பிடித்ததால் பரபரப்பு

திடீரென சரக்கு வாகனம் பிரேக் பிடிக்காததால் டிரைவர் மனு கதவை திறந்து கீழே குதித்தார்.
ஈரோடு,
கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து மோட்டார் சைக்கிளுக்கு தேவையான உதிரி பாகங்களை ஏற்றிக்கொண்டு, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நோக்கி சரக்கு வாகனம் நேற்று மாலை வந்து கொண்டிருந்தது. சரக்கு வாகனத்தை சாம்ராஜ்நகரை சேர்ந்த மனு (வயது 26) என்பவர் ஓட்டினார். சத்தியமங்கலம் அருகே உள்ள திம்பம் மலைப்பாதை 4-வது கொண்டை ஊசி வளைவில் வந்தபோது திடீரென சரக்கு வாகனம் பிரேக் பிடிக்காததால் டிரைவர் மனு கதவை திறந்து கீழே குதித்தார். இதனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இதில் சரக்கு வாகனம் தாறுமாறாக ஓடி மலைப்பாதையில் கவிழ்ந்தது. சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரிய தொடங்கியது. மளமளவென பரவிய தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் உடனே சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் சரக்கு வாகனத்தில் எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சியடித்து அணைத்தனர். இதில் சரக்கு வாகனத்தின் முன்பகுதி முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






