குரூப்-4 தேர்வில் தோல்வி: இளம்பெண் எடுத்த விபரீத முடிவு

தேர்வு முடிவு கடந்த 3 நாட்களுக்கு முன்பு வெளியானது. அதில் சத்திய ரூபா தேர்ச்சி பெறவில்லை என்று கூறப்படுகிறது.
நெல்லை,
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள சேர்வைக்காரன்பட்டியை அடுத்த முப்புலியூர் சிவன்கோவில் தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். கூலி தொழிலாளி. இவரது மகள் சத்திய ரூபா(வயது 21). இவர் ஆழ்வார்குறிச்சியில் உள்ள கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்துவிட்டு அரசு போட்டித்தேர்வுக்கு பயின்று வந்தார். இந்நிலையில் அவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் ஏற்பாடு செய்து வந்த நிலையில், அவர் அதற்கு விருப்பமில்லை என்று கூறிவிட்டு தொடர்ந்து அரசு தேர்வுக்கு தீவிரமாக படித்து வந்துள்ளார். அவர் கடந்த ஜூலை மாதம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வை எழுதியிருந்தார். அதன் தேர்வு முடிவு கடந்த 3 நாட்களுக்கு முன்பு வெளியானது. அதில் சத்திய ரூபா தேர்ச்சி பெறவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் மனவிரக்தியில் இருந்த ரூபா நேற்று பகலில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வயலுக்கு தெளிப்பதற்காக வீட்டில் வைத்திருந்த விஷம் குடித்து மயங்கினார். இதையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த ரூபாவை பார்த்து அவரது பெற்றோர் கதறி துடித்தனர்.தொடர்ந்து அவரை மீட்டு கடையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல்சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு நேற்று இரவு சிகிச்சை பலனளிக்காமல் சத்திய ரூபா பரிதாபமாக இறந்துவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






