செமஸ்டா் தேர்வில் தோல்வி: மருத்துவக்கல்லூரி மாணவர் எடுத்த விபரீத முடிவு

செமஸ்டர் தேர்வில் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்த மாணவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் கோட்டூரை சேர்ந்த வேல்முருகன் மகன் நிஷாந்த் (22 வயது). இவர், நாகை ஒரத்தூரில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அங்குள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்து படித்து வந்த நிஷாந்த், செமஸ்டர் தேர்வில் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்துள்ளார். இதனால் நிஷாந்த், மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு படிப்பதற்காக அங்குள்ள தனி அறைக்கு நிஷாந்த் சென்றார். நேற்று காலை வெகுநேரமாகியும் அவர் வெளியே வராத நிலையில், சக மாணவர்கள் அந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு நிஷாந்த், கயிற்றை கொண்டு மின்விசிறியில் தூக்கு போட்டு தொங்கி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நிஷாந்தை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






