விளைநிலத்தில் புகுந்த யானையிடம் ‘சென்றுவிடு’ என கெஞ்சிய விவசாயி

காட்டு யானை, வனப்பகுதிக்குள் செல்லாமல் ஊருக்கு அருகாமையில் அடிக்கடி உலா வருகிறது.
கடையநல்லூர், -
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே வடகரை பகுதியை ஒட்டிய விளைநிலங்களை குறிவைத்து சமீபகாலமாக இரவு நேரங்களில் யானைகள் கூட்டம் கூட்டமாக வருகின்றன. அவை அதிகளவில் பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. யானைகளை வனத்துக்குள் விரட்டியடித்த நிலையில், கூட்டத்தில் இருந்து தப்பிய ஒரு யானை, வனப்பகுதிக்குள் செல்லாமல் ஊருக்கு அருகாமையில் அடிக்கடி உலா வருகிறது. அந்த யானை நேற்று முன்தினம் வடகரை பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் புகுந்தது. இதைக்கண்டதும் அந்த நிலத்துக்கு சொந்தக்காரரான விவசாயி முஹம்மது மக்தூம் பார்த்து அதிர்ச்சியடைந்தார். அவர் பாதுகாப்பான தூரத்தில் யானையின் முன்னால் நின்றுகொண்டு, பயிர்களை சேதப்படுத்தாமல் தயவு செய்து என் இடத்தை விட்டு சென்றுவிடு, இதை வைத்து தான் வாழ்வாதாரம் நடத்தி வருகிறேன். எங்களை காப்பாத்து... என யானையிடம் கெஞ்சி கேட்டார்.
சில வினாடிகளில் அந்த யானையும் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.






