காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு: மருமகனை கொடூரமாக வெட்டிக்கொன்ற மாமனார்


காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு: மருமகனை கொடூரமாக வெட்டிக்கொன்ற மாமனார்
x

இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள ராமநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 24). பால் வியாபாரம் செய்து வந்தார். மேலும் வெவ்வேறு பகுதிகளுக்கு சென்று பால் கறவை தொழிலும் செய்து வந்தார்.

இவர் பால் கறக்கும் தொழிலுக்கு செல்லும் போது விருவீடு அருகே உள்ள கணபதிபட்டியைச் சேர்ந்த சந்திரன் என்பவரின் மகளான ஆர்த்தி (21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. ஆர்த்தி கரூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2ம் ஆண்டு படித்து வருகிறார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

குறிப்பாக ஆர்த்தியின் தந்தை சந்திரன் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை. இதனால் தங்களை பிரித்து விடுவார்களோ என அச்சமடைந்த காதலர்கள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகும் பெண் வீட்டார் ஏற்றுக்கொள்ளவில்லை.

இதனைத் தொடர்ந்து ராமச்சந்திரன் குடும்பத்தினர் சம்மதத்துடன் காதல் தம்பதி ராமநாயக்கன்பட்டியில் தனியாக வசித்து வந்தனர். ஆர்த்தியின் குடும்பத்தினர் திருமணத்துக்கு பிறகு அவ்வப்போது ராமச்சந்திரன் குடும்பத்தினருடன் பேசிவந்த போதிலும் மாமனார் சந்திரன் பேசாமல் இருந்து வந்தார். மேலும் மாப்பிள்ளை வீட்டாருக்கும், ராமச்சந்திரனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனிடையே திருமணம் - முடிந்து தலைதீபாவளியை கொண்டாட காதல் தம்பதியினர் தயாராகி வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை ராமச்சந்திரன் நிலக்கோட்டை அருகே உள்ள குல்லிப்பட்டிக்கு பால் கறப்பதற்காக பைக்கில் சென்றார்.

பின்னர் மீண்டும் அங்கிருந்து தனது வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார். கூட்டாத்து அய்யம் பாளையம் பகுதியில் உள்ள பாலத்தின் வழியாக ராமச்சந்திரன் வந்தபோது அங்கு ஏற்கனவே நின்று கொண்டு இருந்த மாமனார் சந்திரன் அவரை வழிமறித்து தகராறு செய்தார். அப்போது அவர்கள் 2 பேருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த சந்திரன் தான் ஏற்கனவே மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராமச்சந்திரனை சரமாரியாக வெட்டினார். இதனை எதிர்பார்க்காத ராமச்சந்திரன் பைக்கை விட்டு இறங்கி ஓட முயன்றார். இருந்தபோது துரத்திச் சென்று வெட்டியதில் ராமச்சந்திரன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்.

தப்பி ஓடிய சந்திரனை போலீசார் வலை வீசி தேடிய நிலையில், அவர் உறவினர் வீட்டில் இருந்தது தெரிய வரவே அங்கு சென்று கைது செய்தனர்.

1 More update

Next Story