மது குடித்துவிட்டு வந்ததால் கண்டித்த தந்தை: வாலிபர் எடுத்த விபரீத முடிவு

கோப்புப்படம்
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த மொளச்சூர் கிராமம் வள்ளலார் தெருவை சேர்ந்தவர் ராஜசேகர் (24 வயது). இவர் சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
கடந்த சில மாதங்களாக ராஜசேகர் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். மேலும் தினமும் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் ராஜசேகருக்கும் அவரது தந்தைக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜசேகர் வழக்கம்போல மது குடித்துவிட்டு வந்தார். இதை அவரது தந்தை கண்டித்தார்.
இதனால் மனமுடைந்த ராஜசேகர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த சுங்குவார்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜசேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






