எடப்பாடி பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சர்கள் திடீர் சந்திப்பு

ஒருங்கிணைந்த அ.தி.மு.க. தேவை என்ற குரலை எழுப்பி செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு விதித்துள்ளார்.
சேலம்,
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்து ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரம் காட்டி வருகிறார்.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், ஒருங்கிணைந்த அ.தி.மு.க. தேவை என்ற குரலை எழுப்பி 10 நாட்கள் கெடு விடுத்தார். இந்த சம்பவத்தில் செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலரின் கட்சி பதவியை எடப்பாடி பழனிசாமி பறித்து நடவடிக்கை மேற்கொண்டார். இச்சம்பவம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமியை அவ்வப்போது அ.தி.மு.க.வில் முக்கிய நிர்வாகிகள் சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமியை அவருடைய இல்லத்தில் நேற்று முன்னாள் அமைச்சர்கள் கே.சி.கருப்பணன், சண்முகநாதன் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதேபோன்று சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான பன்னீர்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வெங்கடாஜலம், செல்வராஜ் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர். தொடர்ந்து அ.தி.மு.க. தகவல் தொழில் நுட்ப அணி மாநில செயலாளர் ராஜ்சத்யன் மற்றும் ஈரோடு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர். மேலும் தென் இந்திய பார்வர்டு பிளாக் கட்சி நிறுவன தலைவர் திருமாறனும் சந்தித்து பேசினார்.






