மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே சாமி தரிசனம்

கச்சத்தீவு தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு விக்ரமசிங்கே பதிலளிக்காமல் சென்றார்.
மதுரை,
திருப்பத்தூரில் நாளை நடைபெறும் இலங்கை முன்னாள் மந்திரி ஆறுமுகம் தொண்டைமானின் இல்ல விழாவில் பங்கேற்பதற்காக, இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே இன்று காலை விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தார். தொடர்ந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு விக்ரமசிங்கே வந்தார்.
அவருடன் அவரது மனைவி உடன் வந்திருந்தார். அவர்கள் இருவரையும் வரவேற்ற கோவில் நிர்வாகத்தினர், அவர்களை அம்மன் சன்னதி வழியாக கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர். தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள சன்னதிகளில் விக்ரமசிங்கே தனது மனைவியுடன் சாமி தரிசனம் மேற்கொண்டார். தரிசனத்தை நிறைவு செய்துவிட்டு வெளியே வந்தபோது அவரிடம் கச்சத்தீவு தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் எதுவும் அளிக்காமல் விக்ரமசிங்கே காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார்.






