வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்: கன்னியாகுமரி கலெக்டர் தகவல்


வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்: கன்னியாகுமரி கலெக்டர் தகவல்
x

போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் செய்யும் பொருட்டு பாடவாரியாக 25 மாதிரித் தேர்வுகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், மத்திய மற்றும் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்படும் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

மத்திய மற்றும் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்படும் போட்டித்தேர்வுகளுக்கு மாணவர்களை தொடர்ச்சியாக தயார்படுத்தும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், நாகர்கோவிலில் வைத்து இலவச பயிற்சி வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்று வருகிறது.

இந்த இலவச பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மாணவர்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார் அட்டை நகல் ஆகிய ஆவணங்களுடன் நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரடியாக வருகை புரிந்து தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்த பயிற்சி வகுப்புகள் அனுபவம் வாய்ந்த பயிற்றுனர்களை கொண்டும், SMART BOARD வகுப்புகள் மூலமும் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்பவர்களுக்கு பாடக்குறிப்புகள் (Study Material) இலவசமாக வழங்கப்படும். இந்த தேர்விற்கு மாணவர்களை தயார் செய்யும் பொருட்டு பாடவாரியாக 25 மாதிரித் தேர்வுகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இணையதளமான https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் அனைத்து விதமான போட்டித் தேர்வுகளுக்கான பாடக்குறிப்புகள் மற்றும் இணையதள மாதிரி தேர்வுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story