குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததால் விரக்தி... குளத்தில் குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை


குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததால் விரக்தி... குளத்தில் குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை
x

தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததால் விரக்தியில், குளத்தில் குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

கோயம்புத்தூர்

கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் சுபாஷ் (19 வயது). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.காம் படித்து வந்தார். கடந்த 26-ந்தேதி கல்லூரிக்கு சென்று வருகிறேன் என்று வீட்டில் கூறிவிட்டு சென்றார். ஆனால் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் அன்று மாலையில் அவருடைய தாயாருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய சுபாஷ் தான், கல்லூரி தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்து விட்டதாகவும், இதனால் தனக்கு வாழ பிடிக்கவில்லை என்றும் விரக்தியில் கூறி உள்ளார்.

அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவருடைய தாயார், சுபாசுக்கு தகுந்த அறிவுரை வழங்கி, உடனடியாக வீட்டிற்கு வருமாறு கூறி உள்ளார். அதற்கு அவர் நான் உக்கடம் பெரியகுளக்கரையில் இருப்பதாகவும், வீட்டுக்கு வர விருப்பம் இல்லை என்றும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். உடனே அவர் தனது உறவினர்கள் உதவியுடன் உக்கடம் பெரிய குளக்கரைக்கு வந்து சுபாசை தேடினார். ஆனால் அவரை அங்கு கண்டுபிடிக்க முடியவில்லை. அத்துடன் குளக்கரையில் அவருடைய ஷூக்கள், பை மற்றும் அந்த பைக்குள் செல்போனும் இருந்தது.

எனவே அவர் குளத்தில் குதித்து இருக்கலாம் என்று நினைத்து கடைவீதி போலீசில் புகார் செய்தனர். ஆனால் அதற்குள் இருள் சூழ்ந்துவிட்டதால், குளத்தில் தேட முடியவில்லை. தொடர்ந்து நேற்று முன்தினம் காலையில் இருந்து தீயணைப்புத்துறையினர் படகு மற்றும் கொக்கி உள்ளிட்ட சாதனங்கள் மூலம் சுபாசை தேடினர். மாலை வரை தேடியும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று 3-வது நாளாக தேடுதல் வேட்டை தொடர்ந்தது. இதற்கிடையே குளக்கரையில் உள்ள கோவில் அருகே சுபாசின் உடல் மிதந்தது. உடலை மீட்ட தீயணைப்புத்துறையினர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதிப்பெண்கள் குறைந்ததால் மனம் உடைந்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story