எழும்பூர் ரெயில் நிலையத்தில் கஞ்சா பறிமுதல்: இருவர் கைது

கடந்த 2 நாட்களில் எழும்பூர் ரெயில் நிலையத்தில் 37 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நேற்று ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் செபாஸ்டியன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து எழும்பூர் வழியாக செங்கல்பட்டு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்து இறங்கி பெண் ஒருவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர். அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் 4 பெரிய பொட்டலங்களில் 8 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும்.
கஞ்சா கடத்தி வந்த பெண் தஞ்சாவூர் கலைஞர் நகர் பகுதியை சேர்ந்த சரஸ்வதி என்பதும், ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரியவந்தது. கஞ்சாவுடன் கைதான சரஸ்வதியை போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதேபோல, நேற்று காலை காச்சிகுடாவில் இருந்து எழும்பூர் வந்த ரெயிலில் கேட்பாரற்று கிடந்த பையில் இருந்த ரூ.9½ லட்சம் மதிப்பிலான 19 கிலோ கஞ்சாவை ரெயில்வே பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர். நேற்று முன்தினம் ஹவுராவில் இருந்து எழும்பூர் வந்த ரெயிலில் ரூ.5 லட்சம் மதிப்பிலான 10 கிலோ கஞ்சா கடத்தி வந்த மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த நசீம்ஷேக் (32) என்பவரையும் எழும்பூர் ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.
கடந்த 2 நாட்களில் எழும்பூர் ரெயில் நிலையத்தில் 37 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, பெண் உள்பட 2 பேரை ரெயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.






