‘கடன் வாங்கியாவது மது குடிக்க பணம் தா'- மனைவி மறுத்ததால் தொழிலாளி வெறிச்செயல்

குடிப்பழக்கம் கொண்ட கருப்புசாமி தினமும் போதையில் மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
சென்னை,
கோயம்பேடு, அண்ணா தெருவை சேர்ந்தவர் கருப்புசாமி (வயது 45). கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி வாசுகி (40). குடிப்பழக்கம் கொண்ட கருப்புசாமி தினமும் போதையில் மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்த கருப்புசாமி மீண்டும் மது அருந்துவதற்காக மனைவியிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டார்.
வாசுகி தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதால் வங்கி அல்லது மகளிர் குழுவில் கடன் வாங்கி தர வேண்டும் என கேட்டு தகராறு செய்துள்ளார். மது அருந்த எப்படி வங்கியில் கடன் கொடுப்பார்கள் என மனைவி கேட்டதால் ஆத்திரம் அடைந்த கருப்புசாமி மூட்டை தூக்க வைத்திருக்கும் இரும்பு கொக்கியை எடுத்து மனைவியின் உடலில் சரமாரியாக கிழித்தார். இதில் வாசுகியின் கை, முதுகு ஆகிய பகுதிகளில் கொக்கியால் கிழித்ததில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. வாசுகி வலியால் அலறியதால் கருப்புசாமி அங்கிருந்து தப்பிச்சென்றார்.
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் வாசுகியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சை பெற்று வந்த வாசுகி இந்த சம்பவம் குறித்து கோயம்பேடு போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் கருப்புசாமியை தேடி வருகின்றனர்.






