சுங்கக்கட்டணம் செலுத்தாததால் அரசு பஸ் சிறை பிடிப்பு-நள்ளிரவில் 2 மணி நேரம் பயணிகள் அவதி


சுங்கக்கட்டணம் செலுத்தாததால் அரசு பஸ் சிறை பிடிப்பு-நள்ளிரவில் 2 மணி நேரம் பயணிகள் அவதி
x

கண்டக்டர் வேறு வழியின்றி தனது சொந்தப் பணத்தை செலுத்தி பஸ்சை அங்கிருந்து எடுக்க நடவடிக்கை எடுத்தார்.

நெல்லை,

குமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு தினமும் நான்குவழிச்சாலை வழியாக ஏராளமான அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் நேற்று இரவு நாகர்கோவிலில் இருந்து நெல்லை நோக்கி அரசு பஸ் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது.நள்ளிரவு நேரத்தில் நாங்குநேரி சுங்கச்சாவடியை பஸ் வந்தடைந்தபோது, அதில் சுங்கக்கட்டணம் செலுத்துவதற்கான போது மான பணம் பஸ்சில் ஒட்டப் பட்டிருந்த பாஸ்ட்டேக் அட்டையில் இல்லை என்று கூறப்படுகிறது.

இதனால் சுங்கச்சாவடி ஊழியர்கள் பஸ்சை மேற்கொண்டு செல்ல அனுமதிக்காமல் தடுத்து சிறைபிடித்தனர். உடனடியாக பஸ் கண்டக்டர், போக்குவரத்து கழக மேலாளர் மற்றும் உயர் அதிகாரிகளை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால், நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், எந்தவொரு அதிகாரியும் அழைப்பை ஏற்கவில்லை.

அதிகாரிகளின் இந்த அலட்சியத்தால் கண்டக்டர் செய்வதறியாது திகைத்து போனார். மேலும் பயணிகளில் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பெண்கள் என பலதரப்பட்டவர்களும் இருந்தனர். நள்ளிரவில் பஸ் நிறுத்தப்பட்டதால் அவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பஸ் சுங்கச்சாவடியிலேயே நின்றது.

ஒருகட்டத்தில் பஸ்சில் இருந்த பயணிகள் ஆவேசம் அடைந்து வாக்குவாதம் செய்ததால், கண்டக்டர் வேறு வழியின்றி தனது சொந்தப் பணத்தை செலுத்தி பஸ்சை அங்கிருந்து எடுக்க நடவடிக்கை எடுத்தார். அதன்பின்னரே, 2 மணி நேர தாமதத்திற்கு பிறகு பஸ் நெல்லை நோக்கிப் புறப்பட்டது. இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க போக்குவரத்து கழகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 More update

Next Story