கடைக்கு லைசென்ஸ் கொடுத்ததற்காக ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அதிகாரி சிக்கினார்


கடைக்கு லைசென்ஸ் கொடுத்ததற்காக ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அதிகாரி சிக்கினார்
x
தினத்தந்தி 16 Dec 2025 4:28 PM IST (Updated: 16 Dec 2025 4:29 PM IST)
t-max-icont-min-icon

ரசாயனம் தடவிய பணம் ரூ.8 ஆயிரத்தை பெற்ற அதிகாரியை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கையும் களவுமாக பிடித்தனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகாவை சேர்ந்த கணேசன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) முதுகுளத்தூரில் சென்ற மாதம் புதிதாக லைசென்ஸ் பெற்று பூச்சி கொல்லி மருந்து கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் வேளாண்மை உதவி இயக்குநர் கேசவராமன் என்பவர் சில நாட்களாக கணேசனின் கடைக்கு வந்து, நான்தான் உனக்கு லைசன்ஸ் கொடுத்த அதிகாரி, எனக்கு அலுவலக செலவு நிறைய இருக்கிறது. அதனால் எனக்கு ரூ.15 ஆயிரம் கொடுக்க வேண்டும் எனக்கேட்டுள்ளார்.

இதற்கிடையே, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வேளாண்மை உதவி இயக்குநர் கேசவராமன் மனுதாரருக்கு மீண்டும் போன் செய்து, நான் கேட்ட பணம் ரூ.15 ஆயிரம் என்னாச்சு என கேட்டுள்ளார். அதற்கு, நான் அவ்வளவு பணம் என்னால் கொடுக்க முடியாது என கணேசன் கூறியுள்ளார். இதையடுத்து, ரூ.5 ஆயிரத்தை குறைத்து ரூ.10 ஆயிரம் கொடு என கேசவராமன் கேட்டுள்ளார்.

பின்பு இன்று காலை மீண்டும் போன் செய்து நான் கேட்ட பணத்தில் ரூ.2 ஆயிரம் குறைத்து ரூ.8 ஆயிரமாவது மாலை 3 மணிக்கு என் ஆபிஸில் வந்து கொடு என கேட்டுள்ளார். கேசவராமனுக்கு லஞ்சம் கொடுக்க விரும்பாத கணேசன், ராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துறையில் புகார் செய்தார். பின்னர், லஞ்ச ஒழிப்பு துறை காவல்துறையினரின் அறிவுத்தலின் பேரில் ரசாயனம் தடவிய பணம் ரூ.8 ஆயிரத்தை வேளாண்மை உதவி இயக்குநர் கேசவராமனிடம் கொடுக்கும் போது லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் அவரை இன்று கையும் களவுமாக பிடித்தனர். அவரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story