வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளது: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்


வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளது:  முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்
x

எந்தவித பெரிய மழை என்றாலும் அதனை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 16-ந்தேதி தொடங்கி பல்வேறு நகரங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தீபாவளியன்றும் மழை பெய்ய கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தென் மண்டல வானிலை மைய தலைவர் அமுதா செய்தியாளர்களின் சந்திப்பில் இன்று கூறும்போது, தெற்கு அந்தமான், தென்கிழக்கு வங்க கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 21-ந்தேதி, தென்கிழக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என கூறினார்.

இது அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த மண்டலமாக வலுப்பெறும். இதனால், சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்தில் வீச கூடும் என்றும் ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் 21-ந்தேதி காலைக்குள் கரை திரும்ப வேண்டும் என்றும் கூறியுள்ளார். 24-ந்தேதி வரை தமிழகத்தின் அநேக இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மழை பெய்ய கூடும். இடி, மின்னலின்போது மக்கள் பாதுகாப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டார்.

தொடர்ந்து அவர், தமிழகத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி உள்பட 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 18 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் கூறினார். சென்னையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என கூறினார்.

கனமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். இதற்காக சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அவசரகால செயல்பாட்டு மையத்தின் நடவடிக்கைகளையும் கேட்டு அறிந்துள்ளார்.

இந்த மையம் 24 மணிநேரமும் செயல்பட கூடிய மையம் ஆகும். வெள்ளம், மழை, புயல் மற்றும் நிலச்சரிவு உள்ளிட்ட விசயங்கள் பற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு இந்த மையம் தகவல்களை அளிக்கும். முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அந்த மையத்தில் உள்ள அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்து உள்ளார். பல்வேறு இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட உள்ள நடவடிக்கைகளை பற்றியும் அப்போது அவர் கேட்டறிந்து உள்ளார்.

இதற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு முழு அளவில் தயாராக உள்ளது. தேனி, நீலகிரியில் வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ளும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது என கூறினார். 21 மற்றும் 22 ஆகிய நாட்களில் கனமழை பெய்ய கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதற்காக அனைத்து வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன. எந்தவித பெரிய மழை என்றாலும் அதனை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

1 More update

Next Story