தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை - ஐகோர்ட்டில் வேதாந்தா நிறுவனம் புதிய வழக்கு

அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட தங்கள் மனுக்கள் பரிசீலிக்கப்படவில்லை என வேதாந்தா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
நிலம், நீர், காற்றும் ஆகியவற்றை மாசுபடுத்துவதாக கூறி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு 2018-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்திருந்தது. அந்த உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலையை நிர்வகிக்கும் வேதாந்தா நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தது. அந்த வழக்கை 2020-ம் ஆண்டு ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. பின்னர் அந்த உத்தரவை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தது.
இந்நிலையில், தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை அமைக்க அனுமதிக்க வேண்டும் எனக்கோரி வேதாந்தா நிறுவனம் ஐகோர்ட்டில் புதிய வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், பசுமை தாமிர உற்பத்தி ஆலை அமைக்க அனுமதி கோரி ஏற்கனவே தமிழக தொழில் துறை, சுற்றுச்சூழல் துறை செயலாளர்களுக்கு கடந்த ஜூன் முதல் நவம்பர் வரை 6 மனுக்கள் அனுப்பியும், தங்கள் மனுக்கள் பரிசீலிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அந்த மனுக்களை பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், பசுமை தாமிர உற்பத்தி ஆலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து மத்திய சுற்றுச்சூழல் துறை, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட துறைகளின் பிரதிநிதிகள் மற்றும் நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைத்து, இது சம்பந்தமாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் வேதாந்தாவின் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, பசுமை தாமிர ஆலை அமைப்பது தொடர்பாக அரசு துறை செயலாளர்களுக்கு மனு மட்டும்தான் அனுப்பப்பட்டுள்ளதே தவிர, முறையாக எந்த விண்ணப்பமும் அனுப்பப்படவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி, மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையில் இருக்கும் அபாயகரமான கழிவுகளை அகற்ற வேண்டும் என்றும், அந்த ஆலையை இடிக்க வேண்டும் என்றும் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கு நிலுவையில் உள்ளது என்றும் அரசு தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. இதையடுத்து, நிலுவையில் இருக்கும் அந்த வழக்குடன் இந்த வழக்கையும் சேர்த்து விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.






