ஒரத்தநாடு அருகே கன மழை; 38 ஆடுகள் சாவு

இந்த ஆடுகளுக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சை ,
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள கக்கரக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் யேசு (வயது48) கூலித்தொழிலாளி. இவர் தனது மனைவியின் உதவியுடன் 300 ஆடுகள் மற்றும் 25 மாடுகளை பராமரித்து வருகிறார். இவர்கள் வளர்த்து வரும் கால்நடைகளை இரவு வேளைகளில் விவசாய விளை நிலங்களில் இயற்கை உரத்திற்காக அடைத்து வருவது வழக்கம்.
அதன்படி நேற்று முன்தினம் இரவு பின்னையூர் கீழக்கோட்டை பகுதியில் உள்ள விவசாயி ஒருவரின் விளைநிலத்தில் யேசு தனது ஆடு -மாடுகளை அடைத்து வைத்திருந்தார். கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் நேற்று முன்தினம் இரவு மிக கனமழை கொட்டித்தீர்த்தது.
இதனைத் தொடர்ந்து நேற்று காலை யேசு தனது கால்நடைகளை பார்க்க சென்றபோது அங்கு 38 ஆடுகள் இறந்து கிடந்தன. தொடர் கனமழையில் ஏற்பட்ட குளிர் காரணமாக இந்த ஆடுகள் இறந்தது தெரியவந்தது. இதுபற்றிய தகவல் அறிந்த ஒரத்தநாடு தாசில்தார் யுவராஜ் உள்பட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்திற்கு அரசு கால்நடை டாக்டர் வரவழைக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 10-க்கும் மேற்பட்ட ஆடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
கூலி தொழிலாளி வளர்த்து வந்த 38 ஆடுகள் கன மழையின் காரணமாக இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பாதிக்கப்பட்ட கூலி தொழிலாளிக்கு அரசு நிவாரண வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






