கனமழை முன்னெச்சரிக்கை: சென்னைக்கு 4 மாவட்டங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் அனுப்பி வைப்பு

தலைநகர் சென்னையில் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னை,
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 16-ந் தேதி பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது.தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழ்நாட்டில் சென்னை உள்பட அனேக இடங்களில் கனமழை விட்டு விட்டு பெய்து வருகிறது.
நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலான மழை பெய்து வந்த நிலையில், கடந்த ஓரிரு தினங்களாக மழை சற்று குறைந்துள்ளது. அதே சமயம், தலைநகர் சென்னையில் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களை உள்ளடக்கிய நெல்லை தீயணைப்பு மண்டலத்தில் இருந்து 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மழைக் காலங்களில் தேவைப்படும் உபகரணங்களான லைப் ஜாக்கெட், லைப் போட், மரக்கிளைகளை வெட்டி அகற்றும் கருவிகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் கொண்டு சென்றுள்ளனர்.
சென்னைக்கு அனுப்பி வைக்கப்பதற்காக ஒவ்வொரு தீயணைப்பு நிலையத்திலும் நன்கு பயிற்சி பெற்ற வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த குழுவில் ஸ்கூபா டைவிங் பயிற்சி பெற்ற வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். இந்த தீயணைப்பு வீரர் குழுவினர் நெல்லையில் இருந்து இன்று புறப்பட்டுச் சென்ற நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு மழை பாதிப்பு முடியும் வரை அங்கிருந்து பணி செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.






