விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் அவதி

ஜிஎஸ்டி சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் அனைத்தும் மெதுவாக ஊர்ந்தபடி சாலையில் சென்றன
சென்னை,
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலான பொதுமக்கள், தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்வதால் பஸ், ரயில்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் முடிந்துவிட்டன. தீபாவளி பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு வெள்ளிக்கிழமை மாலை முதல் புறப்பட்டதால் சென்ட்ரல் சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தீபாவளி பண்டிகை வருகிற திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. இதற்காக சென்னையில் தங்கியிருக்கும் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்கிறார்கள். இதற்காக சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தீபாவளி பண்டிகைக்கு முன்தினம் வார இறுதி விடுமுறை தினங்களாக இருப்பதால், அலுவலகம், பள்ளி, கல்லூரிகளை முடித்துக் கொண்டு வெள்ளிக்கிழமை காலையிலிருந்தே ஏராளமானோர் குடும்பத்துடன் பொது போக்குவரத்து மற்றும் சொந்த வாகனங்கள் மூலமும் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் செல்லத் தொடங்கினர்.
இதனால், சென்னை தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், வண்டலூர், கிளாம்பாக்கம், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளை இணைக்கும் ஜிஎஸ்டி சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் அனைத்தும் மெதுவாக ஊர்ந்தபடி சாலையில் சென்றன. விக்கிரவாண்டி சுங்கச்சாவடியிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கூடுதல் வழித்தடம் திறக்கப்பட்டு 8 வழிகளில் வாகனங்கள் செல்கின்றன. இரவு 12 மணி முதல் இன்று காலை 8 மணி வரை 16,300 வாகனங்கள் கடந்து சென்றுள்ளன.






