அரசு விழாவில் 6,007 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கல்


அரசு விழாவில் 6,007 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கல்
x

சென்னை மாவட்டத்தில் இதுவரை 1,33,190 பயனாளிகளுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் இன்று (25.07.2025) சென்னை, அம்பத்தூர் சர்.ராமசாமி முதலியார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற அரசு விழாவில் 6,007 பயனாளிகளுக்கு வீட்டுமனைப்பட்டாக்களை வழங்கினர்.

சென்னை மாவட்டம் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் வீட்டுமனைப் பட்டா வழங்குவதில் உள்ள நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வுகாண தமிழ்நாடு முதல்-அமைச்சரின் அறிவுரைக்கிணங்க, தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் மேற்கொண்ட கலந்தாலோசனை கூட்டத்தை தொடர்ந்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சரின் தலைமையில், வீட்டுவசதி (ம) நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர், குறு, சிறு (ம) நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர், மருத்துவம் (ம) மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், இந்துசமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் ஆகியோர் உறுப்பினர்களாக கொண்ட மாநில அளவிலான உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினால் வழங்கப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் சென்னை மாவட்டத்தில் இதுவரை 1,33,190 பயனாளிகளுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து இன்று (25.07.2025) அம்பத்தூர் சட்டமன்ற தொகுதியில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய திட்டத்தின் கீழ் 2,445 பட்டாக்களும், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திட்டங்கள் கீழ் 62 பட்டாக்களும், நகர நிலவரித் திட்டத்தின் கீழ் 3,500 பட்டாக்களும் என 6,007 பயனாளிகளுக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது.

மேற்படி திட்டங்களில் உள்ள பயனாளிகளுக்கு கணினி பட்டாக்கள் வழங்குவதன் மூலம் திட்ட அனுமதி பெறுவதற்கும், தங்கள் வீட்டு மனையினை மகன் மற்றும் மகளின் பெயரில் பத்திரபதிவு செய்வதற்கும், விற்பனை செய்வதற்கும், வங்கியில் கடன் பெறுவதற்கும் இருந்த தடைகள் நீக்கப்பட்டு வாழ்வில் முன்னேற்றம் அடைய வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் திருப்பெரும்புத்தூர் நடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, மேயர் ஆர். பிரியா, அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல், திரு.வி.க.நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் கா.கணபதி, வில்லிவாக்கம் சட்டமன்ற உறுப்பினர் அ.வெற்றிஅழகன், துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர், நிலநிர்வாகம் கே.எஸ்.பழனிசாமி, இயக்குநர், நில அளவை மற்றும் நிலவரித்திட்டம் ராஜ கோபால் சுன்கரா, மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் ஜி.எஸ்.சமீரன், வட்டார துணை ஆணையாளர் (மத்தியம்)ஏ.கே.கவுசிக், சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் (பொ) / மாவட்ட வருவாய் அலுவலர் சு.கீதா, அம்பத்தூர் மண்டலக்குழுத் தலைவர் பி.கே.மூர்த்தி, நிலைக்குழுத்தலைவர் (சுகாதாரம்) சாந்தகுமாரி உட்பட அரசு அலுவலர்கள், பயனாளிகள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story