பள்ளியின் குடிநீரில் மனிதக் கழிவு கலந்தது மிகவும் கண்டிக்கத்தக்கது - ஜி.கே.வாசன்

கோப்புப்படம்
தமிழகத்தில் குடிநீரில் மனிதக் கழிவு கலப்பது தொடர்ந்து நடைபெறுவது மிகுந்த கவலை அளிக்கிறது என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
சென்னை,
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
திருவாரூர் மாவட்டம் காரியாங்குடி ஊராட்சி தொடக்கப்பள்ளியின் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலந்திருப்பதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இந்த அருவருக்கும் செயலை செய்தவர்களை உடனடியாக கைது செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும்.
மாணவர்களின் உயிரோடு விளையாடும் இதுபோன்ற கயவர்களின் செயல் கடுமையாக கண்டிக்கதக்கது. கடந்த காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று பெரும் கண்டத்துக்குள்ளானது குறிப்பிடதக்கது. மேலும் காலையில் மாணவர்களுக்கு உணவு சமைக்க வைத்திருந்த பொருட்களை சேதப்படுத்தியுள்ளது அவர்களின் இரக்கமற்ற குணத்தையே காட்டுகிறது.
தமிழகத்தில் குடிநீரில் மனிதக் கழிவு கலப்பது தொடர்ந்து நடைபெறுவது மிகுந்த கவலை அளிக்கிறது. மனித நேயத்திற்கும், சமூக நீதிக்கும் விடுக்கும் சவாலாகவே இது இருக்கிறது. இந்த குற்றங்களின் தொடர்ச்சி சட்டத்தின் மீது அவர்களுக்கு பயம் இல்லாததையே காட்டுகிறது.
குடிநீரில் மனித கழிவுகளை கலந்தவர்களை உடனடியாக கண்டறிந்து அவர்களுக்கு கடுமையான தண்டனையை பெற்றுத்தர வேண்டும். மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் இதுபோன்ற சம்பவங்கள் வருங்காலங்களில் நடைபெறாதவாறு உரிய தொடர் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






