கள்ளக்காதலுக்கு கணவர் எதிர்ப்பு; ஆத்திரத்தில் மனைவி, மாமியார் செய்த வெறிச்செயல்

எனக்கும், அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது என்று ஷர்மிளா கூறியுள்ளார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த இடையான்குளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜய் (வயது 27), லாரி டிரைவர். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஷர்மிளா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக மனைவி ஷர்மிளா நடத்தையில் விஜய்க்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷர்மிளா அதேபகுதியில் உள்ள அவரது தாய் ராணி பாத்திமா வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விஜய் அவருடைய வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷர்மிளா மற்றும் அவரது தாயார் ராணி பாத்திமா ஆகிய இருவரிடமும் சந்தேகத்தின்பேரில் விசாரணை நடத்தினர். அதில் இருவரும் சேர்ந்து விஜய்யை கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து ஷர்மிளா போலீசாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
எனக்கும், அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாங்கள் இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று ரீல்ஸ் மற்றும் புகைப்படம் எடுத்தோம். இதை அறிந்த எனது கணவர் விஜய் என்னை கண்டித்தார். இதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கடந்த 17-ந் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த நானும், எனது தாயார் ராணி பாத்திமாவும் சேர்ந்து விஜய்யை உருட்டுக்கட்டை, இரும்பு கம்பியால் தாக்கினோம். இதில் அவர் ரத்தவெள்ளத்தில் சுருண்டு விழுந்து இறந்தார். உடனே அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது போன்று கழுத்தில் கயிற்றைகட்டி ஜன்னலில் தொங்கவிட்டு சென்று விட்டோம்.
மறுநாள் ஒன்றும் தெரியாதது போன்று கதவை திறந்து விஜய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் கூறினோம். ஆனால் போலீஸ் விசாரணையில் மாட்டிக்கொண்டோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அதைத்தொடர்ந்து ஷர்மிளா, தாயார் ராணி பாத்திமா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து போளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர். கணவனை, மனைவியே அடித்து கொன்று தூக்கில் தொங்கவிட்ட சம்பவம் அந்தபகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






