செங்கோட்டையனை சந்திக்கவில்லை: டிடிவி தினகரன்

டிடிவி தினகரனும் செங்கோட்டையனும் நேற்று சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியிருந்தது.
ஈரோடு,
அ.தி.மு.க. பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் நேற்று முன்தினம் சென்னையில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரை சந்தித்து பேசியதாக தகவல் வெளியானது. ஆனால், இந்த தகவலை செங்கோட்டையன் மறுத்து இருந்தார். இது தொடர்பாக செங்கோட்டையன் அளித்த பேட்டியில், “சொந்த வேலைக்காகவும், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் எனது மனைவியை சந்திப்பதற்காகவும் சென்னை சென்றேன். அரசியல்ரீதியாக யாரையும் சந்திக்கவில்லை. இதுதொடர்பாக தவறான செய்தி வெளிவந்துள்ளது.
அ.தி.மு.க. இயக்கம் வலிமை பெற வேண்டும், அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என்ற நோக்கம் மட்டும்தான் எனக்கு இருக்கிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்றுவதற்கு பல்வேறு தியாகங்களை செய்து, தொண்டர்கள் உயிர்மூச்சாக நினைத்துக் கொண்டிருக்கிற அ.தி.மு.க.வை வலிமைப்படுத்தும் நோக்கத்தோடுதான் எனது கருத்தை தெரிவித்தேன். நல்லது நடக்கும் என நம்புகிறேன்.
கட்சியின் ஒருங்கிணைப்பு பணிக்காக பல்வேறு நண்பர்கள் என்னிடம் பேசுகிறார்கள். ஒருமித்த கருத்துக்கள் அவர்கள் மனதில் இருக்கிறது. யார் என்னிடத்தில் பேசினார்கள் என்பதை வெளியிட முடியாது” என்று கூறினார். இந்த நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, செங்கோட்டையனை சந்திக்கவில்லை என்று கூறினார். இது தொடர்பாக டிடிவி தினகரன் கூறும் போது, “ இதுபோன்ற செய்திகளை எல்லாம் ஊடகங்களில்தான் பார்க்கிறேன்.எப்படி செங்கோட்டையன் என்னை சந்தித்தார் என்ற செய்தியை நானே பார்த்தேன். அதேபோல, தவெக நிர்வாகிகளுடன் அமமுக நிர்வாகிகள் ஆலோசனை நடத்துவதாக செய்தியை பார்த்தேன். அதில் உண்மையில்லை. எங்கள் கூட்டணி பற்றி டிசம்பர் மாதத்தில் ஓரளவு தெளிவாக அறிவிப்போம்” என்றார்.






