மொழி திணிப்பு நடந்தால் அதை ஒரு போதும் ஏற்கமாட்டோம் - செல்வப்பெருந்தகை

யார் மொழியை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்பதை ஒன்றிய அமைச்சர் உணர்ந்து பேச வேண்டுமென செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது;
இதையெல்லாம் இந்தி திணிப்பு அல்ல என்று ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சொல்வாரா?
ஒன்றிய அரசு நடத்தும் கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் மற்றும் பல்கலைக்கழகங்களில் இந்தி மொழியே கட்டாய பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்றும், ஒன்றிய அரசுப் பணிகளுக்கு இந்தியைக் கட்டாயமாக்குவது உட்பட 112 பரிந்துரைகளை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான நாடாளுமன்றத்தின் அலுவல் மொழிக்குழு குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பித்தது.
இந்தியாவிலேயே முதன்முறையாக மத்தியபிரதேச மாநிலத்தில் எம்பிபிஎஸ் பாடங்கள் இந்தி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு அந்த புத்தகங்களை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டது. மேலும் இன்ஜினியரிங், தகவல் தொழில்நுட்ப பாடங்களையும் இந்தி மொழியாக்கம் செய்யும் பணிகள் தொடங்கப்பட உள்ளன என்றும் அறிவிக்கப்பட்டது. உள்துறை அமைச்சகத்தின் அனைத்து கோப்புகளும் இந்தியில் மாற்றப்பட்டுள்ளது என்று அமித்ஷா கூறினார்.
அதாவது ஆங்கிலம் இருக்கும் இடத்தில் இனிமேல் இந்தி இருக்க வேண்டும். அதுதான் பாஜகவினரின் விருப்பம். உயர் கல்வி நிறுவனங்கள் மட்டுமல்ல ஒன்றிய அரசுக்கான போட்டித்தேர்வுகள் அத்தனையிலும் ஆங்கிலத்திற்கு பதில் இந்தியே பிரதானமாக இருக்க வேண்டும் என்பது மறைமுகமாக ஆங்கிலம் இணைப்பு மொழியாக உள்ள பிறமொழி பேசும் மாநிலங்களில் இந்தியை திணிக்கும் முயற்சியின் உச்சகட்டம்.
மேலும், மத்திய அரசு அதிகாரிகள் இந்தியை பயன்படுத்தாவிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அமித்ஷா தலைமையிலான குழு பரிந்துரை செய்துள்ளது இந்தி மொழி ஆதிக்கத்தின் பேராவல் தானே தவிர வேறு என்ன சொல்வது?.
யார் மொழியை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்பதை மத்திய மந்திரி உணர்ந்து பேச வேண்டும். எந்த மொழியை யார் வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். ஆனால் மொழி திணிப்பு நடந்தால் அதை ஒரு போதும் ஏற்கமாட்டோம் என்று மத்திய அரசு உணர்ந்து கொள்ளவேண்டும்."
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.