‘மலைப்பகுதிகளை பாதுகாக்காவிட்டால் பின்விளைவுகள் பேரழிவாக இருக்கும்’ - ஐகோர்ட்டு கருத்து

விதிகளை மீறும் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சென்னை,
நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி கோரி லோகநாதன் என்பவர் தாக்கல் செய்த மனுவின் தொடர்பாக 8 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து உதகை நகராட்சி ஆணையர் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தார்.
அந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சட்டப்படி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருந்து 150 மீட்டர் தூரத்திற்கு எந்த கட்டிடமும் கட்டக் கூடாது என விதிமுறைகள் இருப்பதாகவும், எனவே 17 மீட்டர் தூரத்திற்கு உள்பகுதியில் வரக்கூடிய இந்த கட்டிடத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது எனவும் நகராட்சி ஆணையர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மலைப்பகுதிகளையும், வனப்பகுதிகளையும் பாதுகாக்க கொண்டு வரப்பட்ட விதிகளுக்கு முரணாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு இருப்பதாக குறிப்பிட்ட நீதிபதிகள், அந்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். மேலும் விதிகளை மீறினால் சுற்றுச்சூழல் பாதிக்கும் என்பதால் அதிகாரிகள் கவனத்துடன் விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும், விதிகளை மீறும் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மலைப்பகுதிகளை பாதுகாக்காவிட்டால் பின்விளைவுகள் பேரழிவாக இருக்கும் என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், இது சம்பந்தமான சிறப்பு சட்டங்களையும், விதிகளையும் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என மலைப்பகுதிகளில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை பிறப்பிக்க தலைமை செயலாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.






