ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்போருக்கு ஊக்கத்தொகை: சொன்னீங்களே செஞ்சீங்களா - நயினார் நாகேந்திரன்

தமிழ் மொழியையும் தமிழர் உணர்வையும் திமுக வெறும் அரசியல் கருவியாக மட்டுமே பார்க்கிறது என தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போருக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று சொன்னீங்களே செஞ்சீங்களா முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினே?
தமிழ் பண்பாட்டு உணர்வுடன் பல்லாயிரக்கணக்கானோர் வெகுண்டெழுந்து போராடியதன் விளைவாக, ஜல்லிக்கட்டு தடையை நீக்க மாபெரும் அரணாக நின்றவர் நமது பாரதப் பிரதமர் மோடி. ஆனால், பரம்பரை பரம்பரையாகத் தமிழை வைத்துத் தமிழர்களைச் சுரண்டி ஆட்சியைப் பிடித்த நீங்களோ, ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் கழித்தும் ஜல்லிக்கட்டிற்கான வாக்குறுதியை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டுள்ளீர்களே, இதுதான் உங்கள் தமிழினப் பாசமா?
கடந்த வருடம் பொங்கல் பரிசுத் தொகையைப் பதுக்கிவிட்டீர்கள், மாடுபிடி வீரர்களுக்கான ஜல்லிக்கட்டு பரிசுத் தொகையையும் நிறுத்திவிட்டீர்கள், ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போருக்கான ஊக்கத்தொகை குறித்து இன்றுவரை வாய்திறக்க மறுக்கிறீர்கள், ஆக தமிழ் மொழியையும் தமிழர் உணர்வையும் திமுக வெறும் அரசியல் கருவியாக மட்டுமே பார்க்கிறது என்பது தானே இதில் பொதிந்துள்ள உண்மை?
இவ்வாறு அதில் தெரிவிக்கப்படுள்ளது.






