பிரதமர் மோடி வருகைக்காக மசூதியை மூடுவதுதான் திராவிட மாடலா? சீமான்

பாம்பன் மசூதி மினாரை துணியால் மூடி மறைக்கும் முடிவை திமுக அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என சீமான் தெரிவித்துள்ளார் .
சென்னை ,
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
புதிதாகக் கட்டப்பட்டுள்ள பாம்பன் ரெயில் பாலத்தைத் திறந்து வைக்க பிரதமர் மோடி ராமேஸ்வரம் வருகிறார் என்பதற்காக, பாம்பனில் அமைந்துள்ள நூற்றாண்டு பழமையான மசூதியின் மினாரை துணியால் மூடி மறைப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
பிரதமர் மோடி அவர்கள் அரபு நாடுகளுக்குப் பயணம் செய்யும்போது அங்குள்ள மசூதியை இப்படி மூட முடியுமா? அரபு நாட்டிற்குச் சென்று அங்குக் கட்டப்பட்ட கோயிலைத் திறந்துவைத்து வணங்கி வரும் பிரதமர் மோடி அவர்கள், உள்நாட்டிற்கு வருகை தரும்போது மட்டும் மசூதியை மறைப்பது அப்பட்டமான பாசிச மனநிலையே அன்றி வேறென்ன?
தமிழ்நாடு காவல்துறைக்கு இத்தனை நாட்களாக கலங்கரை விளக்கம்போலத் தெரியாத மசூதி பெயர்ப்பலகை, இப்போது திடீரென கலங்கரை விளக்கம்போலவே தெரிவது எப்படி? மசூதியை மறைப்பது பாஜக அரசின் விருப்பமா? அல்லது திமுக அரசின் முடிவா? யாருக்குப் பயந்து, யாரை மகிழ்விக்க திமுக அரசு மசூதியை மூடுகிறது? பிரதமர் மோடி வருகிறார் என்பதற்காக மசூதியை மூடுகின்ற இதுவரை இல்லாத புதிய நடைமுறையை உருவாக்குவதற்குப் பெயர்தான் திராவிட மாடலா?
மசூதி விளக்கு கலங்கரை விளக்கம்போலத் தெரிந்த தமிழ்நாடு காவல்துறைக்கு கோயில் விளக்கு அப்படித் தெரியாமல் போனது ஏன்? இதுதான் திமுக அரசு கட்டிகாக்கும் சமத்துவமா? கடைபிடிக்கும் சமநீதியா? சனாதனத்தை எதிர்க்கும் முறையா?
ஆகவே, பிரதமர் மோடி அவர்களின் வருகையை முன்னிட்டு பாம்பன் மசூதி மினாரை துணியால் மூடி மறைக்கும் முடிவை திமுக அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்துகிறேன்.என தெரிவித்துள்ளார் .






