டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் ராகுல் காந்திக்கு தொடர்பா? தமிழக காங்கிரஸ் கட்சி கண்டனம்


டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் ராகுல் காந்திக்கு தொடர்பா? தமிழக காங்கிரஸ் கட்சி கண்டனம்
x

அரசியல் குற்றச்சாட்டுகளை முன்வைப்பது, அரசியலின் அடிப்படை நெறிமுறைகளுக்கும் மனிதநேயத்திற்கும் எதிரானது என செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

சென்னை,

காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கு. செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. வெளியிட்டு உள்ள அறிக்கையில், டெல்லியில் நடைபெற்ற குண்டுவெடிப்பு எனும் துயர சம்பவத்தால் நாடு முழுவதும் மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். உயிரிழந்தோர் குடும்பங்களின் துயரத்தில் பங்கெடுத்து, அரசும் மக்களும் ஒன்றிணைந்து பாதுகாப்பு மற்றும் அமைதி குறித்து சிந்திக்க வேண்டிய இந்த நேரத்தில் கூட, நாகர்கோவிலில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், பா.ஜ.க.வின் தமிழ்நாடு மாநில முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் மத்திய இணை அமைச்சரான பொன்.ராதாகிருஷ்ணன், டெல்லி குண்டு வெடிப்பு சம்பவத்துடன் காங்கிரஸ் கட்சியையும், நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியையும் தொடர்புபடுத்தி கூறிய கருத்துகள் மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கவை.

அரசியல் குற்றச்சாட்டுகளை முன்வைப்பது, அரசியலின் அடிப்படை நெறிமுறைகளுக்கும் மனிதநேயத்திற்கும் எதிரானது. இத்தகைய விஷயங்களில் அரசியல் பலன்கள் தேடுவது மிகுந்த ஒழுக்கக்கேடு. ராகுல் காந்தி நாட்டின் மக்களுக்காக அச்சம் இன்றி குரல் கொடுத்து வருகிறார். அவரை இவ்வாறு குற்றம்சாட்டுவது, நாட்டின் ஜனநாயக மரபையும், அரசியல் பண்பையும் களங்கப்படுத்தும் செயல் ஆகும்.

இத்தகைய பொறுப்பற்ற மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்த பொன்.ராதாகிருஷ்ணன் தமது வார்த்தைகளை உடனடியாக வாபஸ் பெற வேண்டுமெனவும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் மன்னிப்பு கோர வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.

இந்நேரம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில், டெல்லி குண்டுவெடிப்பில் உயிரிழந்தோரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். காயமடைந்தோர் விரைவில் நலம் பெறவும், குற்றவாளிகள் விரைவாகக் கைது செய்யப்பட வேண்டுமெனவும் மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்துகிறேன் என தெரிவித்து உள்ளார்.

1 More update

Next Story