அரசு பஸ் டிரைவர்களுக்கு பணிச்சுமையா? - அமைச்சர் சிவசங்கர் பதில்


அரசு பஸ் டிரைவர்களுக்கு பணிச்சுமையா? - அமைச்சர் சிவசங்கர் பதில்
x

நீண்ட தூர பஸ்களை, அனுபவமுள்ள டிரைவர்கள்தான் இயக்கி வருகிறார்கள் என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

மதுரை,

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே நேற்று முன்தினம், 2 அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், 11 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். இதில், காயம் அடைந்த டிரைவர் சுதாகர் உள்ளிட்ட 3 பேர் மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களை அமைச்சர் சிவசங்கர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து, மருத்துவ இருப்பிட அதிகாரிகள் சரவணன், முரளிதரன் ஆகியோரிடம் கேட்டறிந்து சிறப்பாக சிகிச்சை அளிக்க கூறினார்.

இதனை தொடர்ந்து அமைச்சர் சிவசங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

விபத்து நடந்த உடனே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துரித நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய அறிவுறுத்தினார். ஒப்பந்த அடிப்படையில் டிரைவர்களை நியமிப்பதால், விபத்து நடந்ததாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. பணிக்கு எடுக்கும்போது உரிய அனுபவமுள்ள, தகுதியான டிரைவர்கள்தான் நியமிக்கப்படுகிறார்கள்.

எதிர்க்கட்சிகள் ஏதோ சொல்ல வேண்டும் என்பதற்காக குற்றம்சாட்டுகிறார்கள். உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு. தேவைப்பட்டால் கூடுதலாக நிவாரணம் அறிவிக்கப்படும். வருங்காலங்களில் இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் இருப்பதை தடுக்க டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி வகுப்புகளை இன்னும் அதிகப்படுத்துவோம்.

நீண்ட தூர பஸ்களை, அனுபவமுள்ள டிரைவர்கள்தான் இயக்கி வருகிறார்கள். இந்த விபத்து ஏதோ ஒரு அஜாக்கிரதை காரணமாக நடைபெற்று இருக்கிறது. டிரைவர்களுக்கு பணிச்சுமை இருக்கிறதா? என்பது குறித்தும் ஆய்வு செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story