தவெகவில் இணைகிறாரா வைத்திலிங்கம்...?

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பணியை தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக தொடங்கி இருக்கிறது.
சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு (2026) ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான அறிவிப்பு, பிப்ரவரி மாதத்தில் வெளியாகும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தேர்தலுக்கான பணியை தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக தொடங்கி இருக்கிறது.
இதற்கிடையில், திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன. ஒரு பக்கம் கூட்டணி பேச்சுவார்த்தை, எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம், மாவட்ட செயலாளர்கள் கூட்டம், பொதுக்கூட்டம் என தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் கட்சிகளை பலப்படுத்தும் வகையில் மாற்றுக் கட்சியினரை கட்சியில் சேர்க்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளரும், சட்டமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் துணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கம் இருந்து வருகிறார். இந்நிலையில் அங்கிருந்து விலகி வைத்திலிங்கம் தவெகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. வைத்திலிங்கம், 2001-2006 மற்றும் 2011- 2016 காலகட்டத்தில் ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர். இப்போது அவர் ஒரத்தநாடு எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.
கடந்த மாதம் தான் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்துள்ள நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கமும் தவெகவில் இணைய இருப்பது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொங்கு பகுதிக்காக செங்கோட்டையனை தவெகவுக்கு கொண்டு வந்த நிலையில், டெல்டா பகுதிகளைக் குறிவைத்தே வைத்திலிங்கத்தை தவெகவில் சேர்க்க உள்ளதாகவும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.






