ஈஷா சார்பில்.. வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு இலவச தகன சேவை


ஈஷா சார்பில்.. வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு இலவச தகன சேவை
x
தினத்தந்தி 10 Dec 2025 10:49 AM IST (Updated: 10 Dec 2025 11:33 AM IST)
t-max-icont-min-icon

வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு இலவச தகன சேவையை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

சென்னை,

ஈஷா அறக்கட்டளை சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் எரிவாயு மயானங்களில், ‘வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு இலவச தகன சேவை வழங்கும் திட்டத்தை’, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று (டிச 9) தொடங்கி வைத்தார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இத்திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர், இதுவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்ட உடல்களை கண்ணியத்துடன் முறைப்படி தகனம் செய்துள்ள ஈஷாவின் பணிகளை பெரிதும் பாராட்டினார்.

சத்குருவின் வழிகாட்டுதலில், ஈஷா அறக்கட்டளை தமிழ்நாட்டில் கடந்த 15 வருடங்களாக பல்வேறு பகுதிகளில் உள்ள மயானங்களை பராமரித்து வருகிறது. தமிழ்நாடு அரசுடன் இணைந்து ஈஷா நிர்வகிக்கும் மயானங்களில் பழமையான சடங்குகள் மற்றும் சக்திமிக்க இறுதிச் சடங்குகள் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளன. இதை ஈஷா வணிக நோக்கமின்றி, சேவை மனப்பான்மையுடன் செய்து வருகிறது.

நேற்று துவங்கப்பட்டுள்ள வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கான இலவச தகன சேவையானது, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களின் இறுதிச் சடங்குகளை கண்ணியத்துடன் எந்தவித நிதிச்சுமையுமின்றி மேற்கொள்ள உதவும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.

ஈஷா அறக்கட்டளை தற்போது தமிழக அரசுடன் இணைந்து 17 எரிவாயு தகன மயானங்களை பராமரித்து இயக்கி வருகிறது. சென்னை, வேலூர், தஞ்சாவூர், நெய்வேலி மற்றும் கோவை மாவட்டத்தில் நஞ்சுண்டாபுரம், வீரகேரளம், துடியலூர், போத்தனூர், வெள்ளலூர், ஆலாந்துறை, தொண்டாமுத்தூர், காரமடை, கவுண்டம்பாளையம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள மயானங்களை பராமரித்து வருகிறது. இதனுடன் கூடுதலாக 3 மயானங்களின் பராமரிப்புப் பொறுப்பையும் ஈஷா அறக்கட்டளை ஏற்க உள்ளது.

இந்த மயானங்களில் அழகான பூங்காவைப் போன்று பசுமையான சூழலை உருவாக்குதல், மயானத்தை சுற்றி அடர் மரங்களை நட்டு பராமரித்தல், முறையான நடைபாதை வசதிகளை உருவாக்குதல், சுகாதாரமான முறையில் குளியல் மற்றும் கழிவறைகளை பராமரித்தல் மற்றும் அரசின் உதவியோடு சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படாத வகையில் சிறப்பான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல் எனப் பல்வேறு பணிகளை ஈஷா மேற்கொண்டு வருகிறது.

ஈஷா சார்பில் மயானங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு இறந்தவர்களின் உடலை கண்ணியமாக கையாளவும், அந்த இறுக்கமான சூழலில் உரிய முறையில் நடந்து கொள்ளவும் சிறப்பான பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

மேலும் மயான வளாகத்தில் இறந்தவர்களுக்கான இறுதி சடங்கு செய்வதற்கான மண்டபம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனுடன் எரிவாயு மின் மயானங்களை பராமரிக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தமிழ்நாடு அரசு வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றி, அதனை உறுதி செய்யும் பணிகளிலும்

ஈஷா ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. சத்குருவின் நோக்கம், நாடு முழுவதும் 1,000 முதல் 3,000 மயானங்களை தத்தெடுத்து, அவற்றின் பாரம்பரியமான புனிதத்தையும், கண்ணியமான செயல்பாட்டு முறையையும் மீட்டெடுப்பதாகும்.

1 More update

Next Story