'திரைப்படத்தில் வெற்றி பெற்றவர்கள் தேர்தல் அரசியலில் வெற்றி பெறுவார்கள் என்று சொல்ல முடியாது' - திருமாவளவன்

தேர்தல் என்பது தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணிகள் இடையிலான இரு துருவ போட்டியாகத்தான் இருக்கும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சேலம்,
சேலம் மாவட்டம் செந்தாரப்பட்டியில் தந்தை தொல்காப்பியரின் மணிமண்டப கட்டுமான பணிகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பார்வையிட்டார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது அவர் கூறியதாவது;-
"தேர்தல் அரசியல் என்பது வேறு, திரைப்பட வெற்றி என்பது வேறு. திரைப்படத்தில் வெற்றி பெற்றவர்கள் எல்லாம் தேர்தல் அரசியலில் வெற்றி பெறுவார்கள் என்று சொல்ல முடியாது. அவர்கள் வெற்றி பெறுவோம் என்று யூகமாக சொல்வது போல், வெற்றி பெறமாட்டார்கள் என்று நாம் யூகமாக சொல்ல விரும்பவில்லை. மக்கள் பார்த்துக் கொள்வார்கள்.
கூட்டணிகள் உருவானாலும் தேர்தல் என்பது தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கும், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கும் இடையிலான இரு துருவ போட்டியாகத்தான் இருக்கும். அ.தி.மு.க. சார்பில் நடைபெறும் பிரச்சார சுற்றுப்பயணத்திற்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.