நீதி வெல்லும்! - தவெக தலைவர் விஜய் பதிவு


நீதி வெல்லும்! - தவெக தலைவர் விஜய் பதிவு
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 13 Oct 2025 5:50 PM IST (Updated: 13 Oct 2025 5:53 PM IST)
t-max-icont-min-icon

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை

கரூரில் கடந்த மாதம் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து கரூர் கூட்ட நெரிசல் மற்றும் அரசியல் கட்சிகள் நடத்தும் ‘ரோடு ஷோ'வுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க கோரி சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விசாரிக்க வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழுவை நியமித்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இதேபோல் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சிறுவன் பிருத்திக்கின் தந்தை பன்னீர்செல்வம், பாத்திமாபானுவின் கணவர் பிரபாகரன், சந்திராவின் கணவர் செல்வராஜ் ஆகியோரும் இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்தனர். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை சிபிஐ விசாரிக்கக்கோரி பாஜகவும் மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த மனுக்கள் அனைத்தும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மகேஸ்வரி, அஞ்சரியா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தபோது, கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

மேலும் சிபிஐ நடத்தும் விசாரணையை கண்காணிக்க ஒரு சிறப்பு குழு அமைக்கப்படும் என்றும், அந்த குழுவுக்கு ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமை தாங்குவார். அந்த குழுவில் 2 ஐபிஎஸ் அதிகாரிகள் இடம்பெறுவார்கள் என்றும் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.

கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதற்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர் வரவேற்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "எத்தனை சோதனைகள் வந்தாலும், எத்தகைய அதிகார வலிமையை எதிர்கொண்டாலும், எத்தனை போராட்டங்களைச் சந்தித்தாலும் நீதியை நிலைநாட்டத் தொடர்ந்து பாடுபடுவோம். வாய்மையே வெல்லும்!" என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் "நீதி வெல்லும்!" என்று பதிவிட்டுள்ளார். கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ள நிலையில் விஜய் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story