கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: விடுபட்டவர்கள் இன்று விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் ஜூலை மாதம் முதல் அவர்களுக்கு மாதம் தோறும் ரூ.1,000 வழங்கப்படும்.
சென்னை,
பெண்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்' தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலமாக, மாநிலம் முழுவதும் 1.14 கோடி பயனாளிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அவர்களது வங்கிக் கணக்கில் ரூ.1,000 செலுத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், 1 கோடியே 14 லட்சம் பெண்கள் தவிர 1 கோடியே 12 லட்சம் பெண்கள் உரிமைத் தொகை பெற முடியவில்லை. எனவே தகுதியான விடுபட்ட பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கடந்த சட்டசபை கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மேலும் பெண்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்களை உடனடியாக ஆய்வு செய்து 2 மாதத்திற்குள் அவர்களுக்கு உரிமைத்தொகை வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள் இன்று விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் 9,000 இடங்களில் புதிதாக இணைபவர்களுக்கான விண்ணப்பபதிவு முகாம்கள் இன்று நடைபெற உள்ளன. இதில், அதிகபட்சம் 15 லட்சம் பேர் வரை புதிதாக சேரக்கூடும் என்று கூறப்படுகிறது. முகாமில் கொடுக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் ஜூலை மாதம் முதல் அவர்களுக்கு மாதம் தோறும் ரூ.1,000 வழங்கப்படும்.
என்னென்ன ஆவணங்களை எடுத்து செல்ல வேண்டும்?
ரேஷன் அட்டை
ஆதார் அட்டை
வாக்காளர் அடையாள அட்டை
வங்கி கணக்கு புத்தகம்
பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
ஆகியவற்றை விண்ணப்பதாரர்கள் கொண்டு செல்ல வேண்டும். வங்கி கணக்குடன் ஆதார் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். மொபைல் போனையும் கொண்டு செல்ல வேண்டும்.
யார் யார் விண்ணப்பிக்கலாம்?
குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்குக் கீழ் உள்ளவர்கள்
ஆண்டு ஒன்றுக்கு வீட்டு உபயோகத்திற்கு 3600 யூனிட்டிற்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துபவர்கள்.
ஐந்து ஏக்கருக்குக் குறைவாக நன்செய் நிலம் அல்லது பத்து ஏக்கருக்குக் குறைவாகப் புன்செய் நிலம் வைத்துள்ளவர்கள் இந்த திட்டத்தில் தாராளமாக இணையலாம்.
யார் யாருக்கு வாய்ப்பு இல்லை?
மத்திய, மாநில, அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகளின் ஊழியர்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் மற்றும் அவற்றின் ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் திட்டத்தில் இணைய வாய்ப்பு இல்லை.
ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களைத் தவிர பிற தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அதாவது ஊராட்சி மன்ற தலைவர்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள், தலைவர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வாய்ப்பு இல்லை.
சொந்தப் பயன்பாட்டுக்கு கார், ஜீப், டிராக்டர் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வைத்துள்ளவர்களும் இணைய முடியாது. தொடர் சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பங்களும் வாய்ப்பு இல்லை.
விண்ணப்பங்கள் பரிசீலனை
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்களை நிரப்பி முகாமில் ஆவணங்களை காட்டி சமர்ப்பிக்கவேண்டும். பின்னர் அந்த விண்ணப்பங்களை அரசு அலுவலர்கள் ஆராய்ந்து விண்ணப்பதாரர்கள் பயனாளர்களாக இணைய தகுதிபடைத்தவர்களா என்பதை உறுதி செய்ய வேண்டும். திட்டத்தில் பயனாளர்களாக இணைக்கப்பட்டாலோ அல்லது நிராகரிக்கப்பட்டாலோ விண்ணப்பதாரர்களின் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.