முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துபெற்ற கமல்ஹாசன்

மாநிலங்களவை தேர்தல் 19ம் தேதி நடைபெறுகிறது.
தமிழக மாநிலங்களவை எம்.பி.க்களான ம.தி.மு.க.வைச் சேர்ந்த வைகோ, தி.மு.க.வைச் சேர்ந்த வில்சன், சண்முகம், முகமது அப்துல்லா, பா.ம.க.வின் அன்புமணி ராமதாஸ், அ.தி.மு.க.வின் சந்திரசேகர் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது. எனவே அதற்கான தேர்தல், வரும் 19ம் தேதி நடைபெறுகிறது.
இதில், அ.தி.மு.க. சார்பில் இன்பதுரை, தனபால் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதற்காக வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
அதேபோல், மாநிலங்களவை தேர்தலில் தி.மு.க. சார்பாக வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம் ஆகியோர் போட்டியிடுகின்றனர். கூட்டணியில் உள்ள மக்கள் நீதி மய்யத்திற்கு தி.மு.க. ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கி உள்ளது. அதில் ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். இதனிடையே, கமல்ஹாசன் உள்பட மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் இன்று வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், மாநிலங்களவை தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த கமல்ஹாசன் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பின்போது மக்கள் நீதி மையம் பொதுச்செயலாளர் அருணாச்சலம், துணைத்தலைவர்கள் உடன் இருந்தனர்.






