திருப்பூர்: சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி திருக்கல்யாண வைபவம்


திருப்பூர்: சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி திருக்கல்யாண வைபவம்
x

சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற கந்தசஷ்டி திருக்கல்யாண வைபவத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்று முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.

திருப்பூர்

அவினாசி அருகே கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் வைப்பு தலமாகவும், நடுச்சிதம்பரம் என போற்றப்படும் பாடல் பெற்ற தலமாகவும், சேவூர் அறம் வளர்ந்த நாயகி உடனமர் ஸ்ரீவாலீஸ்வரர் கோவில் விளங்குகிறது. இக்கோவிலில் சோமஸ்கந்தராய் அருள்பாலிக்கும் ஸ்ரீகல்யாண சுப்ரமணிய சாமிக்கு, கந்தசஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் கடந்த 22 -ந்தேதி தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று (திங்கட்கிழமை) மாலை சூரசம்ஹார விழா நடைபெற்றது.

இதையடுத்து கந்த சஷ்டி விழாவின் நிறைவு நாளான இன்று திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி காலை 10 மணிக்கு, வள்ளி தெய்வானை உடனமர் கல்யாண சுப்பிரமணியர் சுவாமிக்கு வேள்வி பூஜைகளும், மகா அபிஷேகம், மகா அலங்காரம், மகா தீபாராதனைகள் நடைபெற்றன. அதன்பின்னர் வேத மந்திரங்கள், மங்கள வாத்தியங்கள் முழங்க, மூன்று முறை சுவாமிக்கு மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து மாங்கல்யதாரணமும் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, அட்சதை தூவி, அரோகரா கோஷத்தோடு சுவாமியை வழிபட்டனர்.

தொடர்ந்து சிறப்பு மகா தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் அனைவருக்கும் திருமாங்கல்ய பிரசாதம் வழங்கப்பட்டது. பக்தர்கள் மொய்பணம் எழுதினார்கள். இதையடுத்து பகல் 12 மணிக்கு, கல்யாண சுப்பிரமணியர், வள்ளி தெய்வானையுடன் திருக்கல்யாண அலங்காரத்தில் மூன்று முறை பிரகார உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சியில், சேவூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

1 More update

Next Story