மீனவர் சங்க பிரதிநிதிகளுடன் முதல்-அமைச்சரை சந்தித்த கனிமொழி எம்.பி.

மீனவர் சங்க பிரதிநிதிகளுடன் முதல்-அமைச்சரை கனிமொழி எம்.பி. சந்தித்தார்.
சென்னை,
மீனவர் பிரச்சனை தொடர்பாக மீனவர் சங்க பிரதிநிதிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை கனிமொழி எம்.பி. சந்தித்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
"தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவதும், மீனவர்களது படகுகளை சிறைபிடிப்பதும், மீனவர்கள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் இலங்கை கடற்படையை கண்டித்தும், இதற்கு மத்திய அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியும் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் தி.மு.க. சார்பில் கடந்த பிப்ரவரி 16-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் கனிமொழி எம்.பி தலைமையில் நடைபெற்றது.
பல்வேறு மீனவர் அமைப்புகளை சார்ந்தவர்களை கனிமொழி எம்.பி. சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். அதற்கு, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இந்த நிலையில், இன்று (18/02/2025) சென்னை தலைமை செயலகத்தில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி தலைமையில் ராமநாதபுரம் மீனவர் சங்க பிரதிநிதிகளுடன் சந்தித்து, தமிழ்நாட்டு மீனவர்களை தொடர்ந்து கைது செய்து வரும் இலங்கை ராணுவத்தின் அத்துமீறல்களைத் தடுத்து நிறுத்தவும், மத்திய அரசு இவ்விவகாரத்தில் தலையிட்டு நிரந்தர தீர்வைப் பெற்றுத்தரவும் தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும் எனக் கோரிக்கை மனுவை வழங்கினார்.
அப்போது மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






