கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு 12 பேர் ஆஜர்

12 பேர் சி.பி.ஐ. சார்பில் அனுப்பப்பட்டிருந்த சம்மனின் அடிப்படையில் விசாரணைக்கு ஆஜராகினர்.
கரூர்,
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பான சி.பி.ஐ. விசாரணை தீவிரமடைந்து உள்ளது. ஏற்கனவே கூட்ட நெரிசல் சம்பவம் நடைபெற்ற கரூர் வேலுச்சாமிபுரத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த 31 மற்றும் 1-ந் தேதிகளில் நவீன ஸ்கேனர் கருவியுடன் ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து சம்பவ இடத்தில் உள்ள கடைகள், நிறுவனங்களின் உரிமையாளர்கள், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் விசாரணை நடத்துவதற்காக சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. அந்த சம்மனின் அடிப்படையில் நேற்று முன்தினம் 13 பேர் விசாரணைக்கு ஆஜராகினர்.
நேற்று காலை நகை அடகுக்கடை, பேக்கரி, மருந்து கடை, ஓட்டல் உரிமையாளர்கள் உள்பட மொத்தம் 12 பேர் சி.பி.ஐ. சார்பில் அனுப்பப்பட்டிருந்த சம்மனின் அடிப்படையில் விசாரணைக்கு ஆஜராகினர். அவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சம்பவம் நடைபெற்றபோது கடை திறக்கப்பட்டிருந்ததா?, சம்பவத்தின்போது கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் குறித்தும் கேட்கப்பட்டதாக தெரிகிறது. காலை 9 மணியளவில் தொடங்கிய விசாரணை மாலை வரை நடந்தது.






