கரூர் கூட்ட நெரிசல்: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாதம் தலா ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும் - தவெக நிர்வாகி

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
கரூரில் கடந்த மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு அடைக்கலம் கொடுத்ததாக தவெக கரூர் நகர பொறுப்பாளர் பவுன்ராஜையும் போலீசார் கைது செய்துள்ளனர். கரூர் கூட்ட நெரிசல் தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், தவெக மாநில இணை செயலாளர் நிர்மல் குமார் உள்பட சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே, கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 20 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாதம் தலா 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தவெக நிர்வாகியும், ஜேப்பியர் தொழில்நுட்ப கல்லூரி தலைவருமான மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.






