பத்ம விருதுகளுக்கு தேர்வானவர்களுக்கு எல். முருகன் வாழ்த்து


பத்ம விருதுகளுக்கு தேர்வானவர்களுக்கு எல். முருகன் வாழ்த்து
x

தமிழகத்தை சேர்ந்த 13 பேர் பத்ம விருதுகளுக்கு தேர்வாகி உள்ளனர்.

சென்னை,

பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படும் இந்தியாவின் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றாகும். இந்த விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன. பொது சேவை மற்றும் முக்கிய துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்தவர்களை கவுரவிக்க இந்த விருது வழங்கப்படுகிறது.

அந்த வகையில், 2026-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் 13 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பத்ம விருதுக்கு தேர்வானவர்களுக்கு மத்திய இணை மந்திரி எல். முருகன் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவுகளில் தெரிவித்திருப்பதாவது;-

  • சிறந்த கல்வியாளரும் மருத்துவருமான கள்ளிப்பட்டி ராமசாமி பழனிசாமி க்கு ‘பத்ம பூஷன்’ விருது வழங்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மனித உடலில், குடல் சார்ந்த நோய்களை எண்டோஸ்கோபி சிகிச்சை மூலம் குணப்படுத்துவதில் வல்லுநராக அறியப்படுபவர், மிகச் சிறந்த கல்வியாளராக சமூகப் பணிகளை ஆற்றி வருகிறார். தேசத்தின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘பத்ம பூஷன்’ விருது பெறுகின்ற கள்ளிப்பட்டி ராமசாமி பழனிசாமிக்கு, எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
  • சிறந்த சமூக சேவகராக அறியப்படும் மயிலானந்தமுக்கு ‘பத்ம பூஷன்’ விருது வழங்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஆன்மீகக் கல்வி, பொது சுகாதாரம் மற்றும் சமுதாய முன்னேற்றம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு செயல்படுபவர், தனது சேவைகளின் வழி, யோகா மற்றும் இலவச மருத்துவத்தை ஏறத்தாழ 3000 கிராமங்களுக்கு கொண்டு சேர்த்துள்ளார். தேசத்தின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘பத்ம பூஷன்’ விருது பெறுகின்ற மயிலானந்தமுக்கு, எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
  • தமிழகத்தில் போலியோ நோய் தடுப்பிற்கான மிக அதிக மருத்துவ முன்னெடுப்புகளை மேற்கொண்டவரும், 4500-க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார மருத்துவ மையங்களை நிறுவ காரணமாக இருந்தவருமான டாக்டர் ஹண்டேவுக்கு ‘பத்மஶ்ரீ’ விருது வழங்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. முன்னாள் முதல்-அமைச்சர் எம்ஜிஆரின் அமைச்சரவையில் 10 ஆண்டுகாலம் சுகாதாரத்துறை அமைச்சராகவும், மருத்துவத் துறையில் போலியோ நோய் தடுப்பிற்காக மேற்கொண்ட சேவைகளுக்காவும் இவ்விருது வழங்கப்பட்டிருக்கிறது. தேசத்தின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘பத்மஶ்ரீ’ விருது பெறுகின்ற டாக்டர் ஹண்டேவுக்கு, எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
  • அனுபவம் மிகுந்த ஐபிஎஸ் அதிகாரியும், தமிழக காவல் துறையில் மிகச் சிறப்பான பணிகளை ஆற்றியவருமான விஜயக்குமாருக்கு, ‘பத்மஶ்ரீ’ விருது வழங்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அடர்வனம் மிகுந்த சவாலான பகுதியில், மாவோயிஸ்ட் குற்றவாளிகளை அடக்குவதில் திறம்பட செயல்பட்டார். தேசத்தின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘பத்மஶ்ரீ’ விருது பெறுகின்ற விஜயக்குமாருக்கு, எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்
  • புகழ்பெற்ற கணினி அறிவியல் விஞ்ஞானியாக அறியப்படும், வீழிநாதன் காமக்கோட்டிக்கு ‘பத்மஶ்ரீ’ விருது வழங்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவின் முதல் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ‘சக்தி’ எனப்படும் நுண்செயலியை அறிமுகப்படுத்தியவர், தொலைத்தொடர்பு துறையின் பாதுகாப்பு அம்சங்களை தேசிய அளவில் வலுப்படுத்துவதற்கான கண்டுபிடிப்புகளைச் செய்துள்ளார். தேசத்தின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘பத்மஶ்ரீ’ விருது பெறுகின்ற வீழிநாதன் காமக்கோட்டிக்கு, எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
  • கர்னாட்டிக் இசைத் துறையில் மிகச் சிறந்த இசைக் கலைஞர்களாக திகழும் சகோதரிகளான காயத்ரி பாலசுப்ரமணியம் மற்றும் ரஞ்சனி பாலசுப்ரமணியமுக்கு ‘பத்மஶ்ரீ’ விருது வழங்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ‘ஸ்வரதுர’ போன்ற புதிய ராகங்களை கர்னாட்டிக் இசைத் துறையில் அறிமுகப்படுத்தியவர்கள், உலகளவில் தங்களது இசைத் திறமையின் மூலம் பெரிதும் அறியப்படுகிறார்கள். கலைத் துறையில் சாதனை மேற்கொண்டமைக்கு தேசத்தின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘பத்மஶ்ரீ’ விருது பெறுகின்ற காயத்ரி பாலசுப்ரமணியம் மற்றும் ரஞ்சனி பாலசுப்ரமணியமுக்கு, எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
  • புகழ்பெற்ற வேளாண் விஞ்ஞானியாக அறியப்படும் ராமசாமிக்கு ‘பத்மஶ்ரீ’ விருது வழங்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. விவசாயப் பாசன முறை மற்றும் உயிரி எரிவாயு திட்ட மேம்பாடு போன்ற 30-க்கும் மேற்பட்ட திட்டங்களை தேசிய அளவில் வழிநடத்திச் சென்றுள்ளார். இயற்கை விவசாயத்திற்காக வேளாண் அறிவியல் முறைப்படி ஆற்றிய பணிகளுக்காக, தேசத்தின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘பத்மஶ்ரீ’ விருது பெறுகின்ற ராமசாமிக்கு, எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
  • இலக்கியம் மற்றும் கல்வித் துறையில் மிகச் சிறந்த எழுத்தாளராக அறியப்படும் சிவசங்கரிக்கு ‘பத்மஶ்ரீ’ விருது வழங்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. 30 நாவல்கள் மற்றும் 150-க்கும் மேலான சிறுகதைகளை இயற்றியுள்ளார். ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலமாக, தனது எழுத்துக்களின் வழி பாமர மக்களின் உணர்வு, உறவுமுறை மற்றும் வாழ்க்கை நெறிமுறைகள் பற்றி எழுதியமைக்காக, தேசத்தின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘பத்மஶ்ரீ’ விருது பெறுகின்ற சிவசங்கரிக்கு, எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
  • தமிழகத்தின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற சிற்பக் கலைஞர் ராஜ ஸ்தபதி கலியப்ப கவுண்டருக்கு, “பத்மஶ்ரீ” விருது அறிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. சிறுவயது முதலே ஓவியக் கலை மீதிருந்த ஆர்வத்தின்பால், சிற்பக் கலை நோக்கி கவனம் செலுத்தியவர், ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலமாக இக்கலையினை ஊக்குவித்து வருகிறார். தேசத்தின் உயரிய விருதுகளில் ஒன்றான “பத்மஶ்ரீ” விருது பெறுகின்ற அய்யாவுக்கு, எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
  • தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த, கால்நடை விஞ்ஞானி புண்ணியமூர்த்தி நடேசனுக்கு, “பத்மஶ்ரீ” விருது அறிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. கால்நடைகளுக்கு ஏற்படும் நோய் தொற்று போன்ற பாதிப்புகளை, பாரம்பரிய தமிழ் முறைப்படி சிகிச்சை மேற்கொண்ட பாதுகாத்த அய்யா “பத்மஶ்ரீ” விருது பெறுகிறார். அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
  • தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற மிருதங்க இசை வாத்தியக் கலைஞரான பக்தவச்சலமுக்கு, “பத்மஶ்ரீ” விருது அறிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தஞ்சாவூர் பாணியில், மிகவும் ஆற்றல்மிக்க மிருதங்க வாசிப்புக் கலைஞரான அய்யா, கலைத் துறையில் சாதித்தமைக்கான “பத்மஶ்ரீ” விருது பெறுகிறார். அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story