நில ஆவணங்கள் காணாமல் போனதாக முறைகேடாக சி.எஸ்.ஆர். பதிவு: பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்

முறைகேடாக சி.எஸ்.ஆர். பதிவு செய்ததாக பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் புவனகிரி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் லட்சுமி. இவர் மீது நில ஆவணங்களை முறைகேடாக சி.எஸ்.ஆர். பதிவு செய்து தடையின்மை சான்று வழங்கி வருவதாக பல்வேறு புகார்கள் வந்தது. குறிப்பாக சென்னை, திருப்பூர், கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பத்திரங்கள், நில ஆவணங்கள் தொலைந்து விட்டால், புவனகிரியில் காணாமல் போனதாக முறைகேடாக சி.எஸ்.ஆர். பதிவு செய்து தடையின்மை சான்று வழங்கி வந்ததாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. உமாவுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமியை கடலூர் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து அவர் நடவடிக்கை எடுத்தார்.
அதன்பிறகும் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ரகசியமாக விசாரித்து வந்தார். அதாவது, அவர் முறைகேடாக நில ஆவணங்கள் குறித்து பதிவு செய்த சி.எஸ்.ஆர். மற்றும் சம்பந்தப்பட்ட நபர்கள் குறித்தும் விசாரித்தார். விசாரணையில், அவர் மீதான குற்றச்சாட்டுகள் உண்மை என்று தெரியவந்தது.
இதையடுத்து புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.க்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் நேற்று இன்ஸ்பெக்டர் லட்சுமியை பணியிடை நீக்கம் செய்து, விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. உமா உத்தரவிட்டார்.






