இமானுவேல் சேகரனாரின் நினைவு நாளில் அவரின் தியாகத்தை போற்றி வணங்குவோம் - அன்புமணி ராமதாஸ் புகழாரம்

இமானுவேல் சேகரனாரின் 68 -ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
சென்னை,
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
சமூக விடுதலைக்காகவும், தீண்டாமைக்கு எதிராகவும் தமது வாழ்நாள் முழுவதும் போராடிய தியாகி இமானுவேல் சேகரனாரின் 68 -ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்பதற்காக போராடிய அவர், அதே நேரத்தில் சமூகங்களுக்குள் இணக்கம் வேண்டும் என்பதற்காகவும் குரல் கொடுத்து வந்தார். அதனால்தான் அவர் அனைத்து மக்களுக்குமான தலைவராக உயர்ந்தார்.
தமிழ்நாட்டின் சமூக விடுதலை வரலாற்றை இமானுவேல் சேகரனாரை தவிர்த்து விட்டு எழுத முடியாது. அவரது வாழ்க்கையே போராட்ட வரலாறுதான். இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் செல்லூர் கிராமத்தில் 09.10.1924ஆம் நாள் பிறந்த இமானுவேல் சேகரனார், அவரது பதின் வயதிலேயே நாட்டு விடுதலைக்காக குரல் கொடுத்தார். 1942 ஆம் ஆண்டில் இம்மானுவேல் சேகரன் தனது 18வது வயதில் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் பங்கெடுத்து, மூன்று மாத சிறைத் தண்டனை அனுபவித்தார். சிறைக்கு சென்றதால், பள்ளியில் தொடர்ந்து படிக்கும் வாய்ப்பு அவருக்கு மறுக்கப்பட்டது.
ஆனாலும், நாட்டைக் காப்பதற்காக இந்திய போர்ப்படையில் இணைந்த அவர், தேச விடுதலையை உறுதிப்படுத்திய பின்னர் சமூக விடுதலைக்காக போராடத் தொடங்கினார். எண்ணற்ற போராட்டங்களை நடத்தி, ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவராக உருவெடுத்த அவர், 1957-ஆம் ஆண்டில் தமது 33-ஆம் வயதிலேயே கொல்லப்பட்டார். அவர் இன்னும் சில ஆண்டுகள் வாழ்ந்திருந்தாலும் கூட, அவரது சமூக விடுதலை இலக்குகளை எட்டியிருந்திருப்பார்.
இம்மானுவேல் சேகரனாரின் நினைவு நாளில் அவரது விடுதலை உணர்வையும், தியாகத்தையும் நாம் அனைவரும் போற்ற வேண்டும். அதுமட்டுமின்றி, அவர் எந்த இலக்கை அடைய பாடுபட்டாரோ, அந்த இலக்கை அடைவதற்காக உழைக்க அனைவரும் உறுதியேற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






