திருச்சி-திருவனந்தபுரம் இன்டர்சிட்டி ரெயிலில் இன்று முதல் எல்.எச்.பி. பெட்டிகள் இணைப்பு

திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சி வரும் ரெயிலில் நாளை முதலும் எல்.எச்.பி. பெட்டிகள் இணைத்து இயக்கப்பட உள்ளன.
திருச்சி,
தெற்கு ரெயில்வேயில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில், பழைய பெட்டிகள் நீக்கப்பட்டு எல்.எச்.பி. (இலகுரக பெட்டிகள்) என்னும் நவீன ரெயில் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. இந்த பெட்டிகள் எளிதில் தீப்பிடிக்காது, அதிர்வு இல்லாமல் பாதுகாப்பாகவும், வேகமாகவும் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளன.
பல்வேறு முக்கிய எக்ஸ்பிரஸ் ரெயில்களில் எல்.எச்.பி பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. ஆனால் தென்மாவட்டங்கள் செல்லும் சில எக்ஸ்பிரஸ் ரெயில்களில் இன்னும் எல்.எச்.பி பெட்டிகள் இணைக்கப்படாமல் இருந்தது. இதனால் அந்த ரெயில்களிலும் எல்.எச்.பி பெட்டிகளை இணைத்து இயக்க வேண்டும் என்று பயணிகள் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வந்தனர்.
இந்தநிலையில் திருச்சி-திருவனந்தபுரம் சென்ட்ரல்-திருச்சி இன்டர்சிட்டி அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயிலில் (எண்:22627/22628) எல்.எச்.பி. பெட்டிகள் இணைத்து இயக்கப்பட உள்ளன. இந்த ரெயிலில் ஏ.சி.சேர்கார் பெட்டி-1, இரண்டாம் வகுப்பு சேர்கார் பெட்டிகள்-4, பொது 2-ம் வகுப்பு பெட்டிகள் 11, மாற்றுத்திறனாளிகளுக்கான இரண்டாம் வகுப்பு பெட்டி-1, சரக்கு மற்றும் பிரேக் வேன் பெட்டி-1 என்று மாற்றி அமைக்கப்படும்.
அதன்படி, திருச்சியில் இருந்து திருவனந்தபுரம் சென்ட்ரல் செல்லும் ரெயிலில் இன்று (புதன்கிழமை) முதலும், திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து திருச்சி வரும் ரெயிலில் நாளை (வியாழக்கிழமை) முதலும் எல்.எச்.பி. பெட்டிகள் இணைத்து இயக்கப்பட உள்ளன. மேலும், எஞ்சிய எக்ஸ்பிரஸ் ரெயில்களில் விரைவில் எல்.எச்.பி. பெட்டிகள் இணைத்து இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






