மயிலாடுதுறை: சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை கொலை செய்ய முயற்சி- வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை

மயிலாடுதுறையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை அரிவாளால் தாக்கி கொலை செய்ய முயன்ற குமார் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 17-ம் தேதி பாலைபூர் காவல் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காசிநாதன் மற்றும் காவலர்கள் திருமங்கலம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் சட்ட விரோதமாக பாண்டிச்சேரி மது பாட்டில்களை கடத்தி வந்த குத்தாலம், சோழம்பேட்டையை சேர்ந்த மேகநாதன் மகன் குமார் (வயது 28) போலீசாரைக் கண்டதும் தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். அந்த வாலிபரை போலீசார் வளைத்து பிடித்து சோதனை செய்தபோது, எதிர்பாராத நேரத்தில் குமார் தனது இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காசிநாதனை தாக்கி கொலை செய்ய முயற்சித்ததோடு, அவரது இருசக்கர வாகனத்தை உடைத்து சேதப்படுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காசிநாதன் பாலையூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், அப்போதைய பாலையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காவேரி, குற்ற வழக்கு பதிவு செய்து, குமாரை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார். இவ்வழக்கு விசாரணை மயிலாடுதுறை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கினை விசாரித்த மயிலாடுதுறை அமர்வு நீதிமன்ற நீதிபதி விஜயகுமாரி நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில் அவர் குமாருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். இதனைடுத்து குற்றவாளி கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ராமசேபோன், ஆஜராகி வாதாடினார். இவ்வழக்கில் சிறப்பாக பணியாற்றிய அரசு வழக்கறிஞர் ராமசேபோன், பாலையூர் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி மற்றும் நீதிமன்ற ஏட்டு கோகிலா ஆகியோரை மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் பாராட்டினார்.






