துரை வைகோ பதவி விலகலை ஏற்க மதிமுக நிர்வாகிகள் மறுப்பு

மதிமுகவின் தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் நிர்வாகக் குழு கூட்டம் தொடங்கியது.
சென்னை,
ம.தி.மு.க.வின் முதன்மைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து, பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ நேற்று ராஜினாமா செய்தார். தன்னால் இயக்கத்திற்கோ, இயக்க தந்தைக்கோ எள் முனை அளவு கூட சேதாரம் வந்து விடக்கூடாது என்று தான் இந்த முடிவை எடுத்து இருப்பதாகவும், மறுமலர்ச்சி திமுகவின் முதல் தொண்டனாக இருந்து கட்சிக்காக உழைப்பேன் என்றும் தான் வெளியிட்டுள்ள கடிதத்தில் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, துரை வைகோ ராஜினாமா கடிதம் தொடர்பாக, ம.தி.மு.க நிர்வாக குழு கூட்டத்தில் வைகோ முக்கிய முடிவு எடுப்பார் என்று அக்கட்சியின் பொருளாளர் செந்திலதிபன் தெரிவித்தார்.
இந்த நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள மதிமுகவின் தலைமை அலுவலகத்தில், அவைத்தலைவர் அர்ஜுன் ராஜ் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகக் குழு கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, துரை வைகோ மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த கூட்டத்தில், துரை வைகோ பதவி விலகலை ஏற்க மதிமுக நிர்வாகிகள் மறுத்துள்ளனர். துரை வைகோ முதன்மைச் செயலாளராக தொடர வேண்டும் என மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் 40 பேர் பேசியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. துரை வைகோவின் பதவி விலகலை தலைமை ஏற்காத நிலையில், மதிமுக தீர்மான அறிக்கையில் முதன்மை செயலாளர் துரை வைகோ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.