ரூ.21.50 கோடி மதிப்பில் கட்டப்படும் அண்ணல் அம்பேத்கர் திருமண மாளிகையை ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு


ரூ.21.50 கோடி மதிப்பில் கட்டப்படும் அண்ணல் அம்பேத்கர் திருமண மாளிகையை ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு
x

திருமண மண்டபம் 2,767 சதுர மீட்டர் பரப்பளவில் தரைத்தளம் மற்றும் 3 தளங்களுடன் கட்டப்பட்டு வருகிறது.

சென்னை,

தமிழ்நாடு முதல்-அமைச்சரின் நல்வழிகாட்டுதலின்படி, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை பெருநகர் வளர்ச்சி குழும தலைவருமான பி.கே. சேகர்பாபு, இன்று (22.01.2026) திரு.வி.க.நகர் மண்டலம், பெரம்பூர் சந்திரயோகி சமாதி சாலையில் சி.எம்.டி.ஏ. சார்பில் ரூ.21.50 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் அண்ணல் டாக்டர் அம்பேத்கர் திருமண மாளிகை இறுதிக்கட்ட பணிகளை துரிதப்படுத்தும் வகையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரரை அறிவுறுத்தி, அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கினார்.

இந்த மண்டபம் 2,767 சதுர மீட்டர் பரப்பளவில் தரைத்தளம் மற்றும் 3 தளங்களுடன் கட்டப்பட்டு வருகிறது. பின்னர் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பேசியதாவது:

தனியார் திருமண மண்டபங்களில் அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை காரணமாக, பொதுமக்கள் தங்களுடைய திருமணங்கள் மற்றும் சுபநிகழ்ச்சிகளை நடத்துவதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகிறார்கள் என்பதை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முதல்-அமைச்சர் வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் சில இடங்களிலும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் 10 இடங்களிலும் இதுபோன்ற திருமண மண்டபங்களை கட்டுவதற்கு உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில், கடந்த மாதம் 18-ம் தேதி, தமிழ்நாடு முதல்-அமைச்சர், ஜி.கே.எம். காலனியில் பேரறிஞர் அண்ணாவின் திருப்பெயரில் அமைக்கப்பட்ட மிக பிரமாண்டமான திருமண மண்டபத்தை தனது பொற்கரங்களால் திறந்து வைத்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கட்டப்பட்ட இந்த கட்டிடம், தற்போது நாம் நிற்கும் சந்திரயோகி சமாதி பகுதி போன்ற பகுதிகளில் வசிக்கும் தினக்கூலி தொழிலாளர்கள், அரசு பணியாளர்கள் மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்கள், தங்களது திருமணங்கள் மற்றும் சுபநிகழ்ச்சிகளை குறைந்த செலவில் நடத்துவதற்காக, தனியார் திருமண மண்டபங்களுக்கு இணையாக குறைந்த வாடகையில் ஒரு திருமண மண்டபம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்களிடம் முன்வைக்கப்பட்டிருந்தது.

அதனடிப்படையில், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் 21 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் இந்த திருமண மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. இந்த மண்டபத்தில் ஒரே நேரத்தில் 600 பேர் அமர்ந்து திருமண நிகழ்ச்சியை பார்ப்பதற்கான வசதி, முழுவதும் குளிரூட்டப்பட்ட அரங்கம், ஒரே நேரத்தில் 175 பேர் அமர்ந்து உணவு அருந்தக்கூடிய உணவுக்கூடம், மின்தூக்கி வசதி, ஒரே நேரத்தில் 60 முதல் 70 கார்கள் மற்றும் 200 முதல் 300 இரு சக்கர வாகனங்கள் நிறுத்தக்கூடிய வாகன நிறுத்துமிடம் ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், தமிழ்நாடு முதல்-அமைச்சர், இந்த திருமண மண்டபத்திற்கு அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருப்பெயரை சூட்டுவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார். வரும் 29-ம் தேதி, தமிழ்நாடு முதல்-அமைச்சர் தனது பொற்கரங்களால் “அண்ணல் அம்பேத்கர் திருமண மண்டபத்தை” திறந்து வைக்க உள்ளார்.

இந்த மண்டபம், இந்த பகுதியில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும். எல்லோருக்கும் எல்லாம்” என்ற இந்த ஆட்சியின் கனவையும், சமூகநீதி கொள்கைகளையும் வாழ்ந்து காட்டிய அண்ணல் அம்பேத்கரின் நினைவுகளை போற்றும் வகையில், அவருடைய பெயரில் இவ்வாறு திருமண மண்டபங்கள் அமைக்கப்படுவது இந்த ஆட்சியில்தான் சாத்தியமானது என்பதையும் குறிப்பிட விரும்புகிறோம்.

இந்த திருமண மண்டபம் வெறும் விளம்பர ஸ்டிக்கர் அல்ல; முழுக்க முழுக்க தமிழக முதல்-அமைச்சரால் திட்டமிடப்பட்டு, அவருடைய காலத்திலேயே ஒப்புதல் வழங்கப்பட்டு, அவரே வடிவமைப்பை கவனித்து, பெயர் சூட்டி, வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் ஒரு அடையாளமாக உருவாக்கப்பட்ட திட்டமாகும் என தெரிவித்தார்.

கேள்வி - இந்த ஜனவரி மாத இறுதிக்குள் எத்தனை கட்டிடங்கள் திறக்கப்படும்?

திருமண மண்டபங்களை பொறுத்தவரை, குறிப்பிட்ட நேரத்தை நிர்ணயிப்பது கடினமானது. குளிரூட்டும் வசதி, மேஜை, நாற்காலிகள், சமையலறைகள், கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, வாகன நிறுத்துமிடம் போன்ற பல பணிகள் இதில் அடங்கியுள்ளன. இருப்பினும், பிப்ரவரி 28-க்குள் குறைந்தபட்சம் எட்டு திருமண மண்டபங்கள் மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மற்றும் அமைச்சரின் கட்டுப்பாட்டு பகுதிகளில் நடைமுறைக்கு வரும்.

கேள்வி - தைப்பூச விழா ஏற்பாடுகள் குறித்து:

இந்த ஆண்டு தைப்பூசம் மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. எங்கு பார்த்தாலும் “முருகன் அரோகரா” என்ற முழக்கம் நாடு முழுவதும் ஒலிக்கிறது. முருகப்பெருமானை தரிசிக்க வரும் அனைத்து பக்தர்களுக்கும் இறைப்பசியோடு சேர்த்து வயிற்று பசியும் தீரும் வகையில், அன்னதானம், குடிநீர், கழிப்பறை வசதி, தங்கும் இடவசதி ஆகிய அனைத்தும் திட்டமிட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இன்றும், துறை செயலாளர் மற்றும் துறையின் ஆணையாளர் தலைமையில், பழனி திருக்கோயில் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. எப்போதும் போல, நாம் முருகருடன் இருக்கிறோம்; முருகரும் எங்களுடன் இருக்கிறார் என தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது மேயர் ஆர்.பிரியா சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலர்/முதன்மை செயலாளர் கோ. பிரகாஷ் இ.ஆ.ப., மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையாளர் எச்.ஆர். கவுசிக் இ.ஆ.ப., மண்டல குழுத்தலைவர் சரிதா மகேஷ்குமார், சி.எம்.டி.ஏ. கண்காணிப்பு பொறியாளர் ராஜன்பாபு, மண்டல அலுவலர் சொக்கலிங்கம், மாமன்ற உறுப்பினர் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

1 More update

Next Story