ஆம்னி பஸ்களில் “கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை” - அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை

தீபாவளியையொட்டி ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்ததால் அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை,
தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் சென்னையில் இருந்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களை நோக்கி படையெடுப்பார்கள். கார் உள்ளிட்ட சொந்த வாகனங்கள் இல்லாதவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ரெயில், அரசு பஸ் மற்றும் ஆம்னி பஸ் சேவையை பயன்படுத்துவார்கள்.
வரும் 20ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் நிலையில், தற்போது ஆம்னி பஸ்கள் டிக்கெட் விலையை பல மடங்கு உயர்த்தி உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கட்டண வசூலை கண்காணிக்க போக்குவரத்து துறையின் சார்பில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் முக்கிய நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், நெல்லை உள்ளிட்ட இடங்களில் நேரடியாகச் சென்று கண்காணிப்புகள் மேற்கொள்வர்” என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.






