இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் கோரிக்கை


இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் கோரிக்கை
x
தினத்தந்தி 13 Sept 2025 10:22 PM IST (Updated: 14 Sept 2025 5:52 AM IST)
t-max-icont-min-icon

இசைக்கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் இளையராஜா பெயரில் விருது வழங்கப்படும் என்று ஸ்டாலின் பேசினார்.

சென்னை,

1976-ம் ஆண்டு வெளியான ‘அன்னக்கிளி' திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்து அசத்தி வருகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி போன்ற பல்வேறு மொழிகளில் 1,500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில், 8,500-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.இசை உலகின் பிதாமகன் இளையராஜா, லண்டனில் தனது கனவு படைப்பான 'வேலியண்ட்' சிம்பொனியை கடந்த மார்ச் மாதம் 8-ந் தேதி அரங்கேற்றி உலக சாதனை படைத்தார்.இதற்காக இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.இதை நிறைவேற்றும் வகையிலும், இசை பயணத்தில் 50 ஆண்டு பொன்விழாவையொட்டியும் சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று மாலை இளையராஜாவுக்கு தமிழக அரசின் சார்பில் பாராட்டு விழா நடந்தது.விழாவில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்று பேசினார்.விழாவுக்கு தலைமை தாங்கிய தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இளையராஜாவுக்கு பொன்னாடை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கி பாராட்டினார்.விழாவில் அவர் பேசியதாவது:-

இளையராஜா கலை தாய்க்கு மட்டுமல்ல தமிழ் தாய்க்கும் சொந்தம். பாராட்டும் புகழும் அவருக்கு புதிது கிடையாது. அவரை பாராட்டுவதில் நமக்கு தான் பெருமை. அவரது இசை நமது இதயங்களை ஆளத் தொடங்கி அரை நூற்றாண்டுகள் ஆகிவிட்டதுசினிமாவில் சாதித்தது மட்டுமின்றி லண்டனில் சிம்பொனி வாசித்து சிகரம் தொட்ட தமிழர் அவர். திறமையும் கடின உழைப்பும் இருந்தால் உயர்வை எட்டலாம் என்பதற்கு அவர் எடுத்துக்காட்டு. அவரது பாடல்களை முணுமுணுக்காத உதடுகளே கிடையாது.

இசைத்தாயின் தாலாட்டுடன் கூடிய அவரது பாடல்கள் காதல் உணர்வை போற்றுவதிலும், வெற்றியை ஊக்குவிப்பதிலும், வலிகளுக்கு நிவாரணம் தருவதிலும் இணையற்றவை. ஒரு ராஜாவுக்கு நாடும் மக்களும் எல்லையும் இருக்கும்.ஆனால் இந்த ராஜாவுக்கு எந்த மொழிகளும் நாடும் எல்லை கிடையாது. எல்லா மக்களுக்கும் அவர் பொதுவானவர். அவரது இசையே அவரது ஆற்றலையும் உயரத்தையும் எடுத்து சொல்லும்.

இளையராஜாவின் இசையில் நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு போன்றவை வெளிவந்திருந்தால் எங்களுக்கு மனப்பாடம் ஆகி இருக்கும்.எனவே சங்க தமிழுக்கு, சங்க தமிழ் இலக்கியங்களுக்கு நீங்கள் இசை வடிவம் தந்து அதை ஆல்பங்களாக வெளியிட வேண்டும். எல்லோரும் முதல்-அமைச்சரிடம் கோரிக்கைகளை தெரிவித்து முறையிடுவார்கள்.ஆனால் இந்த இடத்தில் தமிழர்கள், தமிழ்நாடு சார்பில் நான் இளையராஜாவிடம் கோரிக்கை விடுக்கிறேன். ராஜா கைய வச்சா அது ராங்கா போகாது.இசை துறையில் இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக இனி ஆண்டுதோறும் இசைஞானி இளையராஜா பெயரில் விருதுகள் வழங்கப்படும்.இளையராஜாவுக்கு எந்த மகுடமும் சாதாரணமானது தான். ஆனாலும் இந்திய நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை அவருக்கு வழங்க வேண்டும் என்பதை ஆவலாக விருப்பமாக கோரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறேன்’ இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story